சமூக வலைதளங்களில் புதிய ரூ.1,000 நோட்டு குறித்துப் பரவி வந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை கண்டறியும் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபகாலமாக இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில், கோயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற ரூ.1,000 நோட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தன. இந்த நோட்டு விரைவில் புழக்கத்திற்கு வரவுள்ளதாக வதந்திகள் பரவின.
இந்தச் செய்தி குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள உண்மை கண்டறியும் குழு, “புதிய ரூ.1,000 நோட்டு வெளியிடப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலி ஆகும். புதிய ரூ.1,000 நோட்டை வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி (RBI) எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து புதிய ரூ.500 நோட்டுகளும், ரூ.2,000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்னர் 2023 மே மாதத்தில் ரூ.2,000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய நோட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

