உலகையே ஆட்டிப் படைக்கும் பொருளாதாரத்திற்கான இந்தாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1901 -ம் ஆண்டு முதல் ‘சுவீடன் ராயல் அறிவியல் அகாடமி’ நோபல் பரிசு வழங்கி வருகிறது. முதலில் ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1969 -ம் ஆண்டு முதல் பொருளியல் துறையும் இணைக்கப்பட்டது.
2026 -ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்கர்களான ராபர்ட் இ ஹால் மற்றும் மைக்கேல் வுட் ஃபோர்ட் ஆகிய இருவருக்கு வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு எதற்காக வழங்கப்படுகிறது என்றால், ‘ பொருளாதார நிலைப்படுத்துதலின் நுண் பொருளாதார அடிப்படைகள் ‘ – படிக்கவே பெரிய வார்த்தையாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா ? எளிமையாக சொல்ல வேண்டுமானால்,
நம் ஊரில் விலைவாசி உயர்வது, அரசாங்கம் போடும் பட்ஜெட், வேலைவாய்ப்பு இவையெல்லாம் தானாக தோன்றுவதில்லை. கம்பெனிகள் எப்படி பணத்தை செலவு செய்கின்றன, ஒரு சாதாரண மனிதன் எப்படி யோசிக்கிறான் என்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் , நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே தீர்மானிக்கின்றன என்பதை மிகத் துல்லியமாக இவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

அதாவது அடிமட்டத்தில் இருக்கும் நுண் பொருளாதாரம் சரியாக இருந்தால் தான், மேலே இருக்கின்ற ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஆடாமல் அசையாமல் இருக்கும். இவர்களின் ஆராய்ச்சி தான் உலக நாடுகள் தங்களின் பணக்கொள்கைகளை ஒழுங்குபடுத்த மிகப்பெரிய வழிகாட்டியாய் அமைந்துள்ளது.
யார் இந்த பொருளாதார வல்லுனர்கள்:
அமெரிக்கரான ராபர்ட் இ ஹால், 1943 -ல் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாலோ ஆல்டோவில் பிறந்தார். 1967 -ல் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அமெரிக்கா பொருளாதார மந்தநிலையில் இருக்கிறதா இல்லையா என்பதை அதிகாரப்பூர்வமாக கூறும் நபராகவும் இருக்கிறார்.

மற்றொரு விருதாளரான மைக்கேல் வுட் ஃபோர்ட், 1955 -ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், சிக்கோப்பியில் பிறந்தார். 1983 -ல் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.இவர் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் செல்வாக்கு மிக்க பணவியல் கோட்பாளர். இவருடைய,’வட்டி மற்றும் விலைகள் பணவியல் கொள்கைக் கோட்பாட்டின் அடிப்படைகள் ‘ எனும் நூலானது நவீன வங்கிகளின் வேத நூலாகக் கருதப்படுகிறது.
இவ்விருவருக்கும் 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர், சமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.