விஷ ஊசி போட்டு மரண தண்டனையா? உச்சநீதிமன்றம் அதிரடி..! – Kumudam

Spread the love

தூக்கு தண்டனைக்கு பதிலாக விஷ ஊசி செலுத்துதல், துப்பாக்கியால் சுடுதல், மின்சாரம் செலுத்துதல் உள்ளிட்ட மாற்று முறைகளை அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூக்கு தண்டனை அதிக வலியை ஏற்படுத்துவதுடன், மரண தண்டனை கைதியின் கண்ணியத்தையும் பாதிப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே தூக்கு தண்டனை முறையை உறுதி செய்த தீர்ப்பை பெரிய அமர்வுக்கு மாற்றுவதற்கான போதுமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

எனினும், இதனால் தூக்கு தண்டனை முறை குறித்து எதிர்காலத்தில் எந்த ஆய்வும் நடத்த முடியாது என்று அர்த்தமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய அறிவியல் அல்லது மருத்துவ ஆதாரங்கள் கிடைத்து, வேறு முறைகள் குறைந்த வலியை ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டால், இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

மேலும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டம், தடயவியல் மருத்துவம், நரம்பியல், குற்றவியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் இடம்பெறலாம்.

அந்தக் குழு, தூக்கு தண்டனைக்கு மாற்றாக விஷ ஊசி உள்ளிட்ட முறைகள் மூலம் தேவையற்ற வலி மற்றும் வேதனையை குறைக்க முடியுமா, அதேநேரத்தில் மரண தண்டனை கைதிகளின் கண்ணியத்தை பாதுகாக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யலாம்.

எனவே, தற்போதைக்கு தூக்கு தண்டனை முறையே தொடரும் நிலையில், விஷ ஊசி உள்ளிட்ட மாற்று முறைகள் குறித்து எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *