Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: உயர் கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையானது. இதற்கு அவர் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தார். அதேபோல் அமைச்சர் சரத்குமார் கடந்த 2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டி நடந்த போது போதைபொருள் பயன்படுத்தியதாக வீடியோ பரவியது. அவர் குழந்தைக்கு மாத்திரை என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற சர்ச்சைகள் அமைச்சர்கள் மீது ஏற்பட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கூப்பிட்ட விசாரிப்பார்.. ஒருவேளை தவறு இருப்பது சந்தேகம் வந்தாலும் அவர்களின் பதவியே பறிபோய்விடும். ஆனால் ஜெயலலிதா பாணியில் பிம்ப அரசியல் செய்யும் முதல்வர் விஜய், இரண்டு அமைச்சர்களையும் கூப்பிட்டு விசாரித்ததாக எந்த தகவல்களும் தெரியவில்லை என்று அரசியல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூரில் அண்மையில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஸ்வநாதன் பெண் குழந்தைகளை கையாண்ட விதம் சர்ச்சையானது. ஓட்டப்பந்தயத்தில் பெண் குழந்தைகளுக்கு காலில் சொடுக்கு போட்டுவிட்டதுடன், அவர்களின் கால்களை பிடித்துவிட்டார். இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். குழந்தைகளுடன் பழகும் போது, அவர்களின் தனிப்பட்ட எல்லைகளையும், மரியாதைகளையும் மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

விஸ்வநாதன் வருத்தம்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், “மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ – மாணவிகள் பங்கேற்று 4 கி.மீ. தூரம் சென்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
அமைச்சர் சரத்குமார்
இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், அமைச்சர் சரத்குமார் குறித்தது… 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நிகழ்வில் நடந்து கொண்ட விதம் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் சரத்குமார் எதனையோ பொடியாக்குவதாக வீடியோ பரவி வருகிறது. அதனை போதைப்பொருள் என்று கூறி எதிர்க்கட்சி நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள். போதைப்பொருளை ஓபனாக நசுக்கி போடுவதாக திட்டி வருகின்றன எதிர்க்கட்சிகள்.. இதனை மறுத்துள்ள சரத்குமார், அது குழந்தைக்கு வழங்க வைத்திருந்த மாத்திரை என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு வயது குழந்தைக்கு மாத்திரை தரலாம் என்று எந்த டாக்டர் கூறினார். அப்படியே மாத்திரை என்றால் தக் லைப் என்று என்று வைத்தது ஏன் என்று சராமரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜெயலலிதா என்றால் பயம்
இந்த இரண்டு பிரச்சனையும் பெரிய அளவில் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக இதுபோன்று எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களிடம் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைத்து விசாரிப்பார்.. அவர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து கேள்விகளை எழுப்புவார். அவர்கள் மீது தவறு இல்லை என்றால் விட்டுவிடுவார்.. எதிர்க்கட்சிகளின் வீண் குற்றச்சாட்டு என்றால் கண்டு கொள்ளமாட்டார்.. ஆனால் பிரச்சனையில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சிறு சந்தேகம் வந்தால் கூட அவர்களை ராஜினாமா செய்ய வைப்பார். அமைச்சர்களின் பதவி அடுத்த நாளே பறிக்கப்படும். அதனால் அமைச்சர்கள் ஜெயலலிதாவிற்கு பயந்து தான் இருப்பார்கள்..
விஜய் செய்வது ஜெயலலிதா பாணி அரசியல்
ஆனால் ஜெயலலிதா போல் பிம்ப அரசியல் செய்யும் முதல்வர் விஜய், அவரை போல் ஏன் அமைச்சர்களை அழைத்த விசாரிக்கவில்லை என்று கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவேளை அப்படி அழைத்து விசாரித்து இருந்தால், அது தொடர்பான எந்த தகவல்களும் வெளியாகவில்லையே என்று கேள்வி எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள்.
இரவோடு இரவாக பதவி பறிபோகும்
அரசியல் நிபுணர்கள் இதுபற்றி கூறும் போது, விஜய்யை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிம்ப அரசியலோடு ஒப்பிட்டுக் குற்றம் சாட்டுகிறார்கள். ஜெயலலிதா காலத்தில் ஒரு அமைச்சர் மீது சிறு புகார் வந்தாலும்,இரவோடு இரவாக பதவிவை பறித்துவிடுவார். இரவில் காரில் இருக்கும் சைரன் லைட் காலையில் இருக்காது. அந்த அளவுக்குக் கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் ஒரு பயமும், ஒழுங்கும் ஜெயலலிதா இருக்கும் போது இருந்தது.
விஜய்யின் அமைதி
ஆனால் விஜய்யும் தனது மேடைப் பேச்சுகளிலும், கட்சி போஸ்டர்களிலும் ‘ஜெயலலிதா பாணி’ கம்பீரத்தையும், அதிரடி பிம்பத்தையும் காட்ட முயல்கிறார். ஆனால், நிஜமாக ஒரு தவறு நடக்கும் போது, நேரடி விசாரணை நடத்தாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது ஏன் என்று அரசிய நிபுணர்கள் கேட்கிறார்கள். திரையில் சூப்பர் ஹீரோவாக ஒரே ஆளாக வந்து வில்லன்களை வெளுத்து வாங்கும் விஜய்க்கும், நிஜ அரசியலின் கூட்டணிக் கணக்குகளுக்கும், நிர்வாகச் சிக்கல்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக எதிர்க்கட்சி நிர்வாகிகள் விமர்சிக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற த.வெ.க-வின் கொள்கை முழக்கம், வெறும் ‘வாக்குறுதி’ தானா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

