விஸ்வரூபம் எடுக்கும் அருள் விக்னேஷ் பிரச்சினை! செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி ஆட்சியர்! | Kallakurichi Collector releases Draft’s electoral roll without press

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் இல்லாமலேயே ஆட்சியர் பத்மஜா, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அது போல் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் சமூகவலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.

kallakurichi arul vignesh

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கும், அந்தந்த மாவட்டகளில் தேர்தல் அலுவலர்களான, மாவட்ட ஆட்சியர்கள் இந்த பட்டியலை வெளியிடுவதாக சொல்லப்பட்டது.

ஆட்சியர்

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர்கள் இல்லை

ஆனால் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா, முன்கூட்டியே செய்தியாளர்கள் இல்லாமலேயே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படும் நிலையில் ஆட்சியர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.

கல்வராயன்மலை விழாவிலும் பத்மஜா மிஸ்ஸிங்

அது போல் கல்வராயன்மலை பகுதியில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடங்கி வைக்கும் அரசு விழாவிலும் ஆட்சியர் என்ற முறையில் பத்மஜா கலந்து கொள்ளவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆபாச மெசேஜ்

அது போல் தனது மனைவிக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அவரது கணவர், தலைமைச் செயலாளர் சாய்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கண்டித்த கனிமொழி

எனினும் அருள் விக்னேஷுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியர் பத்மஜாவுக்கு அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியிருந்தாராம். மேலும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கும் வந்து தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்மஜா, தனது கணவரும் விழுப்புரம் ஆட்சியருமான அப்துல் ரகுமானிடம் இது குறித்து தெரிவித்திருந்தாராம். அவரும் இது குறித்து மாவட்ட எஸ்பியிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தியிருந்தாராம்.

இந்த நிலையில் இந்த விஷயத்தை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: “நான் அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள். எங்களது ஆட்சியையும் என்னையும் குறை கூறும் நோக்கில் அவதூறு பரப்புகிறார்கல்.

என் தலைவர் முதல்வர் சொல்வது போல் என் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தேவையில்லை. சமூகவலைதளங்களில் பரவி வருவது போல் நான் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்ந்ததில்லை. மக்கள் அளிக்கும் மனு தொடர்பான தகவல்கள் மட்டுமே ஆட்சியரிடம் பரிமாறி இருக்கிறேன்.

புகார் அளித்தால் நடவடிக்கை

என் மீது பொய்யான தகவலை பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்ட போது சம்பந்தப்பட்டவர் புகார் அளித்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி உண்மை எனும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அது போல் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் புகார் அளித்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *