விஸ்வரூபம் எடுக்கும் தற்கொலை வழக்கு; ​தலைமை தேர்தல் ஆணையர் மீது விசாரணை… கேரள அரசு தீவிரம்!

Spread the love

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தேசிய அளவில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அவர்மீது கேரள மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளது. கேரளா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், முன்பு அந்த மாநிலப் பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். கேரளாவில் எம்.சி சாலை மேம்பாட்டுக்காக கே.எஸ்.டி.பி திட்டத்தின்கீழ் 127 கிலோமீட்டர் தூர சாலைப் பணிக்கான ரூ.215 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம், மலேசியாவின் பதி நிறுவனம் மற்றும் கொச்சியின் பகீரதா இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2005 டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டியிருந்த நிலையில், அரசின் நிலம் கையகப்படுத்துதல் தாமதமானதால் பணிகள் முடங்கின. இதனால் அந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.17 கோடி மதிப்பிலான பில்களை அரசு நிறுத்தி வைத்தது. ​அப்போது பொதுப்பணித்துறைச் செயலாளராக இருந்த ஞானேஷ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுப் பணியைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலில், நிறுவனத்தின் கேரள திட்ட மேலாளராக இருந்த மலேசிய இன்ஜினீயர் லீ சீ பின் மலேசியாவிற்குத் திரும்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 2006-ல் வி.எஸ்.அச்சுதானந்தன் அரசு பொறுப்பேற்றதும் ஞானேஷ் குமார் பொதுப்பணித்துறைச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா

கே.எஸ்.டி.பி சாலை திட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாகவும், இதன் பின்னணியில் மலேசிய ஒப்பந்த நிறுவன தலைமை இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்திலும் தற்போது மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ​சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ஊழல் வழக்கு தொடர்பாக கேரள விஜிலென்ஸ் துறை முதற்கட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளதுடன், விஜிலென்ஸ் இயக்குநரின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக, 2005-ம் ஆண்டின் பொதுப்பணித்துறை ஆவணங்கள் மற்றும் 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை கோப்புகள் ஆகியவை இப்போது தீவிரமாக மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அன்று இப்புகார் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், ஞானேஷ் குமார் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். அப்போது ஒப்பந்த ஊழல் தொடர்பாக அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.கே.முனீருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட போதிலும், நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், வெளிநாட்டு இன்ஜினீயரின் தற்கொலை குறித்து அரசு அதிகாரிகள்மீது போதிய விசாரணை நடத்தப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *