விஸ்வரூபம் : திரைக்குள்ளும் புறமும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 27

Spread the love

பின் லேடனின் இருப்பிடத்தை அறிவதற்காக அல்-கய்தாவுக்குள் ஊடுருவி அதன் முக்கியப்புள்ளிகளாக இருக்கும் உமர், சலீம் போன்றோருடன் நெருக்கமாகிறார்கள் இந்திய ரா ஏஜெண்டுகளான விசாம் அகமதுவும், இம்தியாஸும்! ஒரு கட்டத்தில் அந்த இருப்பிடத்தை அறியக்கூடிய நிலை வரும்போது, லொகேட்டர் கருவியை வைத்து அதை அமெரிக்கப்படைக்கு அடையாளம் காட்ட நினைத்து தௌஃபிக் எனும் ஓர் அப்பாவியின் பையில் கருவியை வைக்கிறார்கள். காரியம் முடிந்ததும் அதை நேரம் பார்த்து அவனது பையிலிருந்து நீக்கிவிடும்படி இம்தியாஸிடம் சொல்கிறான் விசாம். ஆனால், இம்தியாஸால் அதைச் செய்யமுடியவில்லை. அதனால், தௌஃபிக் உமரால் கொடூரமாகக் கொல்லப்படுகிறான்.

விசாம் வேதனையுடன், ’உன்னால் ஒரு அப்பாவி இறந்துபோய்விட்டான், அல்லா நம்மை மன்னிக்கமாட்டார்’ என்று இம்தியாஸிடம் வருந்தும்போது, விசாமைக் கூர்மையாகப் பார்த்தபடி இம்தியாஸ்,

’நம்மை அல்ல, உங்களை என்று சொல்லுங்க. இந்த அண்டர்கவர் ஆபரேசனுக்காக எனக்கு வைக்கப்பட்ட பெயர்தான் இம்தியாஸ். என் நிஜமான பெயர் இதுவல்ல’

என்று சொல்லிவிட்டு விலகிச் சென்றுவிடுகிறான்.

இந்திய ’விசாம் அகமது கஷ்மீரி’களுக்கே உரிய தனித்துவமான பிரச்சினை இது. நாட்டுக்காக உயிரையே கொடுத்தாலும், கொடுத்தது ஓர் இஸ்லாமியராக இருந்தால், ’நல்லா செக் பண்ணிக்கிட்டீங்களா? அவருக்கு வேறு ஏதும் ஹார்ட் அட்டாக் இருந்திருக்கப்போகுது’ என்ற சந்தேகமும், அவர்கள் தியாகத்தின் மீதான கேள்விகளும் அவர்களைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது இந்த செக்யூலர் தேசத்தில். இப்படியான அரசியல் மற்றும் கலை நுணுக்கங்களே, ஒரு சாதாரண கமர்ஷியல் கதையை வேறு ஒரு தளத்துக்கு நகர்த்துகின்றன.

விஸ்வரூபம் கமல்

விஸ்வரூபம் படத்தை RKFI நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தவர் கமல்ஹாசன். ஹேராம், விருமாண்டிக்குப் பிறகு கமல்ஹாசனின் இயக்கத்தில், 2013ம் ஆண்டில் வெளியான இந்தப்படமே இன்றுவரை கமல்ஹாசன் இயக்கிய கடைசிப் படமாக இருக்கிறது. கமல்ஹாசன் படங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது புதிதல்ல என்றாலும், இந்தப்படம் இரண்டு காரணங்களுக்காக அதன் வெளியீடு சமயத்தில் பெரும் குழப்பங்களைச் சந்தித்தது. ஒன்று, இதை கமல்ஹாசன் டிடிஎச் முறையில் நேரடியாக வீடுகளுக்கே ஒளிபரப்ப நினைத்தார். புதிய தொழில்நுட்பங்களையும், அறிவியலையும் முன்னின்று வரவேற்கும் புரிதல்கொண்ட அவர், சினிமாவின் எதிர்காலத்தைச் சரியாகவே கணித்தார். ஆனால், அப்போது தியேட்டர்காரர்களின் மிகப்பெரிய எதிர்ப்பு காரணமாக அந்தமுயற்சிக் கைவிடப்பட்டது.

அடுத்து, படம் என்ன கதையைப் பேசப்போகிறது என்பதே தெரியாமல், சில இந்து, முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி, படத்தையே தடை செய்ய வேண்டும் என்பது வரை அது போனது. அப்போதைய தமிழக அரசும் அவர்களுக்குச் சாதகமாக பட வெளியீட்டை தற்காலிகமாகத் தடை செய்ய, குறித்த தேதியில் விஸ்வரூபம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் வெளியாகி, தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகாமல் ஒரு விநோதமான சூழ்நிலையைச் சந்தித்தது விஸ்வரூபம்.

இந்தத் தடையால், வெளிநாடுகளில் படம் ரிலீஸாவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ் ரசிகர்கள் அருகிலிருக்கும் மாநிலங்களுக்குப் படையெடுத்துச் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தார்கள். அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், சென்சார் போர்டு மற்றும் இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகள் சிலர் இந்த கருத்துரிமைக்கு எதிரான தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கையைக் கண்டித்தனர்.

மனம் நொந்து போன கமல்ஹாசன் இந்த சமயத்தில்தான், ’இப்படியான மோசமான அரசியல் விளையாட்டுகளில் கலைஞர்கள் பகடைக் காயாக்கப்படுவது சரியானதல்ல. இந்த நிலை நீடிக்கும் என்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டிலிருந்து இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று அறிவித்தார். அதன் பின்னர் சுமார் 10 நாட்கள் கழித்து தடை விலக்கிக்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் படம் ரிலீஸானது. பெரும் வரவேற்பையும், பெருவெற்றியையும் பெற்றது.

கமலின் ‘விஸ்வரூபம்’

பாப்லோ நெரூதா, தஸ்லிமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்களும், ஆண்ட்ரி தார்கோவ்ஸ்கி போன்ற சினிமாக் கலைஞர்களும் தங்கள் கருத்துகளாலும், அரசியல் நிலைப்பாடுகளாலும் அதிகாரத்துடனும், அடிப்படைவாதத்துடனும் மோதியவர்கள். அதனால் சொந்த மண்ணில் வாழமுடியாத நெருக்கடிக்கு ஆளானவர்கள். உலகின் எந்தப் பகுதியிலும் கலைஞர்களின் கருத்துச் சுதந்திரம் எளிதான ஒன்றாக இருந்ததில்லை. கமல்ஹாசன் எதிர்கொண்டதும் இதன் இந்திய வடிவங்களில் ஒன்றுதான். கலைஞர்கள் இப்படியான அரசியல் விளையாட்டுகளில் பகடைக் காய்களாக்கப்படாமல் இருப்பதுதான் ஒரு நல்ல ஜனநாயகச் சமூகத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று.

இந்தப் படத்தின் கதையில், ’அமெரிக்கா பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாது’ போன்ற சர்ச்சைக்குரிய மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், மொத்தமாக அல் -கய்தா போன்ற ஓர் அமைப்பை வைத்துக்கொண்டு, உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் எப்படி ஒரு ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் கதையை எடுக்க முடியும் என்பதுதான் கமல்ஹாசனின் பிரதான நோக்கமாக இருந்தது என்பதை உணரமுடியும். இயல்பிலேயே ஓரளவுக்கு இடதுசாரி அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவர் கமல்ஹாசன் என்பதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.

அல் -கய்தாவுக்குள் ஊடுருவும் விசாம், பின் லேடன் இருப்பிடத்தை அறிந்து கொண்டாரா, அதை இந்திய, அமெரிக்கப் படையினரிடம் சொன்னாரா என்பதெல்லாம் கதையில் இல்லை. அது நிஜத்தில் நடந்த ஒரு சம்பவம் என்பதால், சுவாரசியத்துக்காக அதைத் தொட்டுவிட்டு உடனே விலகிக்கொண்டார்.

படத்தின் ஒரு காட்சியில் பின் லேடன் காட்டப்படுகிறார். ஆனால், இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே 2011-ல் பின் லேடன் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்டுவிட்டார். அதனால், படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் அவர் கொல்லப்படுவதற்கு முன்பான டைம் லைனில், அந்த ஆஃப்கன் களத்தில்தான் நடக்கிறது என்று கொள்ளலாம். சலீம், உமர் ஆகியோரின் நட்பைப் பெறும் விசாமுக்கு, அதன் மூலம் பின்னர் நிகழப்போகும் அல் -கய்தாவின் அமெரிக்கா மீதான நியூக்ளியர் தாக்குதல் குறித்தத் தகவல்கள் கிடைக்கின்றன. அதன் பின் விசாமின் உண்மை முகம் வெளிப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்து தப்பித்துச் செல்கிறான்.

அமெரிக்காவில் மாற்று அடையாளங்களோடு விஸ்வநாத் எனும் கதக் நடன ஆசிரியராக, நிருபமா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறான் விசாம். இன்னும் ரா-வின் ரகசிய ஏஜெண்டாக இருக்கும் அவன், உமரால் மேற்கொள்ளப்படும் அமெரிக்கா மீதான அந்தத் தாக்குதலைத் தடுத்தானா என்பது கதை. இந்தியா, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா என மிகப்பெரிய கேன்வாஸை எடுத்துக்கொண்டு, நிஜத்தில் நடந்த சம்பவங்களோடு புனைவையும் கலந்து, ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லராக விஸ்வரூபத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். ஏற்கனவே மகாத்மா காந்தியின் கொலைக்கு முன்பான கொலை முயற்சிகள், அதற்கான காரணங்கள் குறித்த அரசியலை பேசிய படம் ஹேராம் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாம் அகமதுவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அறிமுகக் காட்சியில் கதக் நடனக் கலைஞராக, நீண்ட நடனப் பயிற்சியின் விளைவாக பெண் நளினத்தோடு இருக்கும் விஸ்வநாத் எனும் போலித் தோற்றத்தில் தோன்றுவார். அதில் அப்படியொரு அற்புதமான பர்ஃபார்மன்ஸைக் கொடுத்திருப்பார்! சக ஏஜெண்டாக ஆண்ட்ரியா, மனைவியாக பூஜா குமார் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க ரா ஏஜெண்ட்ஸ், அல் -கய்தா என்று செல்லும் சீரியஸான கதையமைப்பில் சற்றே அப்பாவியாக வலம் வரும் கதாபாத்திரம் பூஜா குமாருக்கு. அவருக்குக் குரல் நடிப்பைக் கொடுத்திருந்தது அபிராமி.

விசாமின் உயரதிகாரி ஜெகன்நாத்தாக பிரபல இந்தி இயக்குநர் சேகர் கபூர் நடித்திருந்தார். சலீமாக இந்தி நடிகர் ஜெய்தீப் அஹலாவாத் நடித்திருந்தார். இது அவரது தொடக்க காலப் படங்களுள் ஒன்று. தற்போது பாதாள் லோக், தி ஃபேமிலி மேன் போன்ற வெப்சீரிஸ்களில் நடித்து, இந்தியில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். முக்கிய வில்லன் உமராக நடித்திருந்தது ராகுல் போஸ்! பெங்காலியை சேர்ந்த போஸ், நாடகம், டிவி, சினிமா என பல மீடியங்களிலும் நடிப்பு, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் என தொடர்ந்து இந்தி மற்றும் ஆங்கில சினிமாக்களில் இயங்கி வருபவர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படத்தில் ஜஹாங்கிர் எனும் பாத்திரத்தின் மூலமாக, நம் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர். அவர் இப்படி ரேடியேஷனால் பாதிக்கப்பட்ட, ஒரு டெரர் வில்லனாக காட்சியளித்தது புதுமையாக இருந்தது.

படத்தின் ஒளிப்பதிவை சானு ஜான் வர்கீஸ் செய்திருந்தார். மதுசூதனன் தலைமையிலான குழு VFX பணியைச் செய்திருந்தது. படத்தின் கலை இயக்கம் லால்குடி இளையராஜா மற்றும் பூண்டவி தோர் தவிபசாஸ் ஆகியோர் செய்திருந்தார்கள். படம் சமகாலத்தின் சிறப்பான VFX பணியைக் கொண்டிருந்தது. மிகச்சிறப்பாக அமைந்திருந்த விஷுவல்ஸ், தமிழ் சினிமாவின் டெக்னிகல் எக்ஸலன்ஸை புதிய உயரத்துக்குக் கொண்டுபோனது. ஆஃப்கன் மண்ணின் குடியிருப்புகள் சென்னை அரங்கில் படமாக்கப்பட்டவை. அதுவும் அதன் மீதான அமெரிக்கப் படைகளின் தாக்குதல் காட்சிகளும் கலை இயக்கம், VFX மற்றும் ஒளிப்பதிவு ஆகிய மூன்று துறைகளின் ஒத்திசைவின் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு சாட்சியாக அமைந்திருந்தன.

இசை சங்கர்-எஸான்-லாய். ஆளவந்தானைத் தொடர்ந்து இவர்களது கூட்டணி மீண்டும் இணை சேர்ந்தது. கமல்ஹாசனின் வேர்-ஹவுஸ் டிரான்ஸ்பர்மேஷன் சண்டைக் காட்சி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காட்சிகளுள் ஒன்றாக அமைந்தது. அதற்கான பதற வைக்கும் பின்னணி இசையும், வைரமுத்து எழுதிய ’விஸ்வரூபம்’ பாடலும் அந்தக் காட்சியைப் பெரிய அளவில் மெருகேற்றின. இப்படி ஒரு ஸ்பை திரில்லர் படம், கமல்ஹாசன் எழுதி, சங்கர் மகாதேவனோடு இணைந்து பாடிய ’உன்னைக் காணாமல்’ எனும் ஒரு மென்மையான காதல் பாடலில் காண்ட்ராஸ்ட்டாகத் தொடங்குகிறது.

’…எதிர்பாராமலே அவன்

பின்னிருந்து வந்து எனை

பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு

உலகுண்ட பெருவாயன் எந்தன்

வாயோடு வாய் பதித்தான்

இங்கு பூலோகம் என்றொரு பொருளுள்ளதை

இந்தப் பூங்கோதை மறந்தாளடி’

கோதை, கண்ணனை நினைத்து; காதலி, காதலனை நினைத்து அவன் தன்னை முத்தமிட்டதைச் சொல்லும் பாடல். ’என் வாயில் முத்தமிட்டவன், சாதாரணமானவனல்ல, இந்த உலகையே உண்ட பெருவாயன் அவன்’ -ஒரு தாய் தன் பிள்ளையின் சிறப்பை நினைத்து, ஒரு காதலி தன் காதலனின் சிறப்பை நினைத்துக் கர்வம் கொள்ளும் இடம். எத்தனை அழகானதொரு கவிதை!

சிறந்த கலை இயக்கம் மற்றும் நடன அமைப்புக்காக விஸ்வரூபம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. படத்தில் இடம்பெற்ற ஒரே நடனக் காட்சி, ’உன்னைக் காணாமல்’ பாடலில் இடம்பெற்ற கதக் நடனம். அதைச் செய்தவர் பண்டிட் பிர்ஜு மகராஜ் எனும் புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர். பிர்ஜுவுக்கு, அப்போது வயது 73. அந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது, முதுமை காரணமாக இருக்கையில் அமர்ந்தபடியே நடன அமைப்பைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் பிர்ஜு. அப்போது, அவர் முன்பாகத் தரையில் அமர்ந்தபடி, ஒரு சிறுவனின் ஆர்வத்தோடு அத்தனை ஈடுபாட்டோடு அவரது முகத்தைப் பார்த்துப் பாவனைகளைக் கமல்ஹாசன் கற்றுக்கொள்ளும் மேக்கிங் விடியோ ஒன்றைப் பார்க்க முடிந்தது. அப்போது கமல்ஹாசனுக்கு வயது 57. கமல்ஹாசன் ஏன் இப்படியான ஒரு பெருங்கலைஞனாக இருக்கிறார் என்பதற்கான விடை அதில்தான் இருக்கிறது.

இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு வேலை இல்லை எனினும், கமல்ஹாசனின் மெல்லிய பகடி சில நுணுக்கமான இடங்களில் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஒரு கட்டத்தில் விசாம், நிருபமா, அஷ்மிதா மூவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அப்போது நிருபமாவை ஒரு அமெரிக்க பெண் அதிகாரி விசாரித்துக்கொண்டிருப்பார்.

அப்போது நிருபமா, ’நான் விளையாடல ஆபீசர். உண்மையைத்தான் சொல்கிறேன். சத்யமேவ ஜெயதே!’ என்று சொல்லும்போது, சத்யமேவ ஜெயதேவை மட்டும் ஆங்கிலத்தில் அல்லாமல் ஃப்ளோவில் அப்படியே உச்சரித்துவிடுவார்.

அதற்கு அவர், ’உன் மொழியில என்னைக் கெட்டவார்த்தை சொல்லி திட்டினா கையை முறிச்சிடுவேன்’ என்று சொல்ல,

நிரு, ’ஓ, காட்’ என்று பதறுவார்.

அதற்கும் அவர், ’எந்தக் கடவுள்? அல்லாவா?’ என்று தொடர்ந்து கேட்க,

நிருபமாவும் விடாமல், ’அல்லா என் கணவரின் கடவுள். என் கடவுள் வேறு. அவருக்கு நான்கு கைகள் உண்டு’ என்று சொல்கிறார்.

அதற்கு அந்தப் பெண் நக்கலாக சிரித்துவிட்டு, ’நான்கு கைகள் கொண்ட கடவுளா? பிறகெப்படி அவரை சிலுவையில் அறைய முடியும்?’ என்று கேட்பார்.

அந்த சின்ன நகைச்சுவைக்குள்தான் எத்தனை ஆழ்ந்த பொருள் அடங்கியிருக்கிறது! சிலுவையில் அறையப்பட்டால்தான் ஒருவர் கடவுளாகும் நிலையை அடைகிறாரா? கடவுளை அவர் தீர்மானிக்கிறாரா அல்லது நாம் தீர்மானிக்கிறோமா அல்லது சிலுவைகள் தீர்மானிக்கின்றனவா?

அமெரிக்காவில் நடக்கவிருந்த நியூக்ளியர் தாக்குதலை விசாம் தடுக்கிறான். உமரும், சலீமும் அமெரிக்காவிலிருந்து தப்பி விடுகிறார்கள். இந்த இடத்தில் விஸ்வரூபம் பகுதி-1 படம் முடிகிறது. ஏற்கனவே ஒருங்கிணைந்து எடுக்கப்பட்டிருந்ததால் மீதிப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் பகுதி-2 பல்வேறு தயாரிப்புச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டதால் மிகவும் தாமதமாக 2018-ல்தான் வெளியானது.

முதல் பாகம் அத்தனை இறுக்கமாகக் கட்டப்பட்டு, பிரமிப்பான உணர்வைத் தந்ததோடு, அதன்பின் நிகழப்போவனவற்றை எதிர்பார்க்கும் நிலைக்கு நாம் கொண்டுவரப்பட்டோம். ஆனால், முதல் பாகத்தின் நிறைவாக, தப்பிச் சென்ற உமரைத் தேடிச் சென்றிருக்க வேண்டிய பரபரப்பான படம், விசாம் அல் -கய்தாவுக்குள் எதற்காக, எப்படி நுழைந்தார், விசாமின் அம்மா யார், அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார், இந்தியாவில் உயர் மட்டத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள், இங்கிலாந்துக் கடலடியில் கிடக்கும் ஆயுதம் தாங்கிய கப்பல் என எங்கெங்கோ போய்விட்டு இறுதியில்தான் உமரிடம் வருகிறது.

ஈஸ்வர ஐயர் வரும் பகுதிகள், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி என சில பகுதிகளைக் குறிப்பிட முடிந்தாலும், முதல் பகுதி ஏற்படுத்திய தாக்கத்தையும், நிறைவையும் விஸ்வரூபம் பகுதி-2 ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றே சொல்ல முடியும். ஒரு படைப்பை துவங்கும் போது இருக்கும் ஆர்வம், கனவுகள், திட்டம் எல்லாம் காலத்தால் இழுத்தடிக்கப்பட்டு, அந்தப்படைப்பு முழுமையடைவதற்குள் வடிந்துபோவது துரதிருஷ்டவசமானது. இப்படி சினிமாவுக்குள்ளும், சினிமாவுக்கு வெளியேயும் விஸ்வரூபத்தின் இரண்டு பகுதிகளும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் பல!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *