கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டோரதி’ திரைப்படம் இன்று (செப்.25) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் ‘டோரதி’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், ” என் அன்பான ரசிகர்களுக்கு, இன்று ‘டோரதி’ வெளியாகும் நாள்.

இது என்னுடைய 10-வது திரைப்படமாக இருந்தாலும், என் முதல் படமான ‘பிட்சா’ வெளியான நாளில் எனக்கு இருந்த அதே பதற்றமும் ஆர்வமும் தான் இன்னமும் இருக்கிறது. இந்தப் படத்தை உருவாக்கிய நாட்களில் ஒரு மனிதனாக, இயக்குநராக, கலைஞனாக நான் நிறைய மாறியிருக்கிறேன்.
நான் இயக்கிய படங்களிலேயே யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான, மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு கதை இது. 90-களில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தக் கதையைத் தமிழ் சினிமாவில் சொல்ல நினைத்தபோது, பலரும் என்னிடம் அடிக்கடி கேட்ட கேள்வி ஒன்றுதான்…
“எந்த நம்பிக்கையில் இந்தத் திரைப்படத்தை எடுக்க நினைக்கிறீர்கள்?”
அதற்கு அன்று நான் சொன்ன பதில், இன்று வரை நான் நம்பும் பதில் ஒன்றுதான் ‘என் ரசிகர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை!’
ஒரு குழந்தை தான் வரைந்த முதல் ஓவியத்தைப் பெற்றோரிடம் காட்டுவது போல, எங்களுடைய ‘டோரதி’ திரைப்படத்தை உங்களிடம் திரையிட நாங்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது…
இனி ‘டோரதி’ உங்களுடையவள்…
அவளுக்கு உங்கள் மனதில் ஒரு சிறிய இடம் கொடுங்கள், நிச்சயம் உங்கள் இதயங்களைத் தொடுவாள்…
தயவுசெய்து திரையரங்குகளுக்குச் சென்று எங்கள் திரைப்படத்தைப் பாருங்கள்; அது உங்களுக்கான ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

திரைப்படம் பார்க்கும் முன் ஸ்பாய்லர்களிடமிருந்து எதையும் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுவே உங்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும்.
மேலும், நீங்கள் உணர்ந்த அதே உணர்வை மற்றவர்களும் பெற வேண்டும் என்பதால், தயவுசெய்து கதையின் திருப்பங்களையோ அல்லது படத்தின் காட்சிகளையோ இணையத்தில் பகிர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.