
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் பயணித்து வரும் தனுஷ், தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், அவரது 56-வது படம் குறித்த புதிய தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தற்போது தற்காலிகமாக “D56” என அழைக்கப்படும் இப்படம், கிராமத்து பின்னணியில் உருவாகும் மண் சார்ந்த ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் D56 :
தனுஷின் 56-வது படத்தை Sithara Entertainments நிறுவனம் தயாரிக்கிறது என்றும், “லப்பர் பந்து” படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
மேலும், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் சில மேடை நிகழ்வுகளில் இந்த கூட்டணி குறித்து தெரிவித்திருந்த நிலையில், இன்று படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் “ஊர்க்கூடி நாள் வைப்பு நாளை” என்ற பதிவை வெளியிட்டது. அதுபோலவே, இன்று D56 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக D56 படம் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.
மதுரை பின்னணியில் உருவாகும் மண் சார்ந்த கதை?
D56 திரைப்படம் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் என ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தன. கிராமத்து வாழ்க்கை, உறவுகள், மோதல்கள் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கதைக்களமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு நடிகர் தனுஷ் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இன்று இப்படத்தின் பட பூஜை மதுரை மாரநாடு கருப்பணசுவாமி கோவிலில் நடைபெறும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பூஜை நிகழ்வு தொடர்பான சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ரசிகர்களை கவர்ந்த D56 டேக் லைன் :
மதுரை மாரநாடு கருப்பணசுவாமி கோவிலில் D56 பட பூஜை நிகழ்வில் இடம்பெற்றுள்ள பேனரில், “Dhanush in D56 – A Tamil Arasan Pachamuthu Film” என்றும், “Music by Sai Abhyankkar” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் டேக் லைனாக “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த டேக் லைன், படத்தின் கதைக்களம் மற்றும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
D56 படத்தில் இணையும் முக்கிய நட்சத்திரங்கள்?
D56 படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக நடிகர்கள் “எஸ்.ஜே.சூர்யா”, “உறியடி விஜயகுமார்”, “ப்ரீத்தி முகுந்தன்”, “காளி வெங்கட் ” ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இதற்கிடையில், ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் இணைந்துள்ளார் என்றும் , முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் தனுஷ் – வடிவேலு கூட்டணி இணைய வாய்ப்பு இருந்ததாகவும், சில காரணங்களால் அது நடைபெறாமல் போனதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
RAW & RUSTIC ஆக்ஷன் களத்தில் தனுஷ்?
தனுஷின் முந்தைய படங்களைப் போலவே D56 திரைப்படமும் வலுவான கதைக்களத்துடன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமத்து பின்னணி, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்ட கமர்ஷியல் படமாக இது இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் வன்முறை சார்ந்த காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பதால், சென்சார் சான்றிதழ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இன்று படத்தின் பூஜை தொடங்கியுள்ளது என்ற அதிகாரபூர்வ பதிவும் , சிறப்பு போஸ்ட்டரையும் படக்குழு வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் :
தனுஷ் தற்போது பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் “OM” திரைப்படம் அவரது அடுத்த வெளியீடாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் “தமிழ் முருகன்” திரைப்படமும் தனுஷின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் D56 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.