வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் – இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!| Sivaganga Village Gives Up Firecrackers for 50 Years to Protect Birds

Spread the love

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தருகின்றன.

சுமார் ஆறு மாதங்கள் வரை இங்கு தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்துவிட்டுத் தங்களது சொந்த ஊருக்குப் பறந்து செல்லும் இந்தச் சிறகு விருந்தினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் கொல்லுக்குடிப்பட்டி கிராம மக்கள் உறுதியாக உள்ளனர்.

கொல்லுக்குடிப்பட்டி கிராமம்

கொல்லுக்குடிப்பட்டி கிராமம்

இதன் காரணமாக, சுமார் 50 ஆண்டுகளாக தீபாவளித் திருநாளில் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை இவர்கள் முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர விசேஷங்களின்போதும் வாணவெடி போன்ற அதிக சத்தம் எழுப்பும் வெடிகளைப் பயன்படுத்துவதில்லை.

பறவைகளின் நலனுக்காக இக்கிராம மக்கள் காட்டி வரும் இந்த மாபெரும் தியாக உணர்வைப் போற்றும் வகையில், வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் இவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் கொல்லுக்குடிப்பட்டி மற்றும் வேட்டங்குடிப்பட்டி கிராம பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கொல்லுக்குடிப்பட்டி கிராமம்

கொல்லுக்குடிப்பட்டி கிராமம்

அப்போது கிராம மக்கள், “இந்த வேட்டங்குடி சரணாலயத்தின் பெயரை “கொல்லுக்குடிப்பட்டி சரணாலயம்’ என மாற்ற வேண்டும்” என்று தங்களது பல ஆண்டு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *