"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" – ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், தரம் உயர்த்துவது குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனை வளாகம், நோயாளிகளின் படுக்கைவசதி, மருத்துவமனை தூய்மை, பராமரிப்பு போன்றவற்றை ஆய்வுசெய்ததுடன் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் இடவசதி குறித்து மருத்துவ அதிகாரி அருட்செல்வன் மற்றும் மருத்துவர் விக்னேஷிடம் கேட்டறிந்ததுடன், நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ்,

aaivu

“பிரசாரத்தின் போது மக்களை சந்தித்ததில் அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லாதது குறித்து அவர்கள் தெரிவித்த குறைகளின் அடிப்படையில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டேன். 100 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனை கட்டடத்தில் மழை தண்ணீர் உள்ளே விழுவது போன்ற பல குறைபாடுகள் உள்ளது. போதிய கட்டட வசதி இல்லை. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் இருப்பதால் கட்டடங்களை இடித்துவிட்டு கட்டுமான பணி மேற்கொள்வது என்பது இயலாத காரியம் என்ற நிலையில், 85 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. 157 வரை படுக்கை வசதிகள் ஏற்படுத்தலாம் என உத்தரவு இருந்தாலும் அதற்கான வசதிகள் இல்லை. இங்குள்ள 2 கட்டடங்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. அந்த இடத்தில் புதிய படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தித் தர வேண்டும் கடந்த ஆட்சியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை. தினசரி 12- 15 அவசர சிகிச்சைக்கு என நோயாளிகள் அனுமதிக்கப்பட்டாலும், 3-5 நோயாளிகள் மிகவும் சீரியஸ் நிலைமையில் வந்தாலும் அவர்களுக்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. ஐ.சி.யூ வசதியில்லை. ஐந்து பேரும் உயிருக்கு போராடும் நிலையில், நோயாளிகளுக்கு வசதிகள் இல்லாததால் தலைமை மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பும்நிலை உள்ளது. அவர்களது உயிர் கேள்விக்குறியான நிலை உள்ளது. அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திதந்தால் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும். மருத்துவர் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை. 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு மருத்துவர் 600 நோயாளியை பார்ப்பது என்பது இயலாத காரியம். மேலும், 21 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். போதுமான டாக்டர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் அதிக வேலைப்பளு உள்ளது.

லேப், எக்ஸ்ரே போன்ற கூடுதல் மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும் 2013-ம் ஆண்டுக்கான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கையே உள்ளது. பிற்பகலில் வரும் நோயாளிகள் CT ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்கமுடியாத நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குபவர்களுக்கு என தனியார் பராமரிப்பில் தங்கமிடம் இருந்தாலும், தங்குமிடம் இருக்கிறதா என்பது கூட பலருக்கு தெரியவில்லை. இங்கு உள்ள கழிப்பறைகள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்யவும், மேற்கத்திய டாய்லெட்களை மாற்றி இந்தியன் டாய்லெட் வசதி ஏற்படுத்தித்தரவும் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். பல இடங்களில் நோயாளிகளிடம் பணியாளர்கள் பணம் வாங்கும் நடவடிக்கை உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். வரும் நாட்களில் இது களையப்படும். அரசிடம் தெரிவித்து மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

interview

மக்களுக்கான அரசாக இது செயல்படும். மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நடவடிக்கை எடுத்து தீர்க்கவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக தெரிவிக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திரைப்படங்களில் வருவது போல ஒரே நாளில் இது சரி செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து தான் இதனை முடிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, கலந்தாலோசித்து கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனையை வேறு இடத்தில் மாற்றலாம் என்றாலும் ஸ்ரீரங்கம் பகுதியில் வருவாய்த்துறை மூலம் நான்கு ஏக்கர் பரப்பளவு உள்ள இடங்கள் உள்ளதா என ஆய்வு செய்தும், மாநகர பகுதிகளில் இடமில்லை. சோமரசம்பேட்டையிலேயே நான்கு ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *