வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் – விறுவிறு கோடைகால வியாபாரம்!

Spread the love

சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய தூரம் நடந்து சென்றாலே தாகமும், சோர்வும் உடலைப் பிடித்துக்கொள்கின்றன.

இன்றைய காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க ஏசி வசதியையும், குளிர்பானங்களையும் நாம் பயன்படுத்தினாலும் அவை சில நிமிட குளிர்ச்சியை மட்டுமே தருகின்றன. ஆனால் உடலுக்குத் தேவையான உண்மையான சக்தியும் ஆரோக்கியமும் இயற்கையான உணவுகளின் மூலமே கிடைக்கிறது. அதனாலயே பலர் கூழ், நன்னாரி சர்பத், நீர்மோர் போன்ற பாரம்பர்ய பானங்களைத் தேடி செல்கின்றனர். வெயிலில் சோர்ந்து வரும் ஒருவருக்கு ஒரு கப் கூழோ அல்லது ஒரு டம்ளர் நன்னாரி சர்பத்தோ கிடைத்தால், அது வெறும் பானமாக இல்லாமல் சோர்வுக்கு நிவாரணமாக மாறிவிடுகிறது. எளிமையாக கிடைக்கும் இந்த பாரம்பர்ய உணவுகள் உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு புத்துணர்ச்சியையும் தருகின்றன. காலம் மாறினாலும், வெயிலை சமாளிக்க நம் மக்கள் இன்னும் இயற்கையையே நம்புகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இந்த கோடையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நம் உடலிற்கு குளிர்ச்சியை தரும் அமிர்த பானங்களான கூழ், சர்பத் ஆகியவை சாலையோர கடைகளில் கிடைப்பதை நம்மால் அதிகளவு காணமுடியும். அவை பெரிய கடைகளாக இருப்பதில்லை, ஒரு சிறிய தள்ளுவண்டி, ஐஸ் பெட்டி, குவளைகள், சிறிய பானம் நிறைந்த குடம், குடை இவ்வளவுதான். ஆனால் அந்த சிறிய இடத்தை சுற்றி நிற்கும் மக்களின் எண்ணிக்கை இந்த வியாபாரத்தின் தேவையை காட்டுகிறது. காலை முதல் மதியம் வரை இயங்கி வரும் இந்த சிறிய கடைகள் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியே காணப்படுகின்றன.

ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமல்லாமல், வெயிலில் அலைந்து வேலை செய்யும் டெலிவரி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் ஒரு நிமிட நிம்மதிக்காக இக்கடைகளில் நின்று கூழ் மற்றும் இயற்கை பானங்களை அருந்திச் செல்கின்றனர். வெயிலின் சோர்வில் இருந்து உடலுக்கு ஒரு சிறிய ஓய்வை தரும் இடமாகவே இந்தக் கடைகள் பலராலும் பார்க்கப்படுகின்றன. கூழ் கடைகளில் பொதுவாக கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், மோர் கூழ் போன்ற பாரம்பர்ய உணவுகளே விற்கப்படுகின்றன. அதனுடன் மாங்காய், துவையல், ஊறுகாய், மோர் மிளகாய் போன்ற இயற்கை சைடிஷ்களையும் வழங்குகின்றனர். வெயிலில் சோர்ந்து வரும் மக்களுக்கு இவை சாதாரண உணவாக இல்லாமல், உடலுக்கு சக்தி தரும் ஒரு முழுமையான உணவாகவே மாறுகின்றன.

வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த வேலை மிகவும் எளிதாக தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் நிறைய உழைப்பும் சிரமங்களும் மறைந்துள்ளன. அதிகாலையிலேயே எழுந்து கம்பு அல்லது கேழ்வரகை ஊறவைத்து, அதை அரைத்து சமைத்து, சரியான அளவில் மோர் சேர்த்து தயாரிக்க வேண்டும். அதோடு மாங்காய் வெட்டுதல், துவையல் அரைத்தல், மோர் மிளகாய் வறுத்தல் போன்ற வேலைகளும் தொடர்ந்து இருக்கும். மக்கள் காலை நேரத்திலேயே வந்து வாங்கிச் செல்லும் முன் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டியதால், இவர்களின் நாள் விடியற்காலையிலேயே தொடங்கிவிடுகிறது. சர்பத் பொதுவாக நன்னாரி சிரப், ரோஸ் சிரப், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சில இடங்களில் சப்ஜா விதைகள், இஞ்சி சாறு போன்றவற்றையும் சேர்த்து விற்கின்றனர்

வெயிலில் சோர்ந்து வரும் மக்களுக்கு இந்த பானங்கள் உடனடி குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகின்றன. குறிப்பாக நன்னாரி சர்பத் உடல் வெப்பத்தை குறைத்து, நீண்ட நேரம் வெளியில் வேலை செய்பவர்களுக்கு சோர்வை குறைக்க உதவுகிறது.

கோடை காலங்களில் மதிய நேரத்தில் இந்த கடைகளின் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அலுவலக பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாளர்கள், மாணவர்கள் என பலரும் சில நிமிட ஓய்வுக்காக இங்கு வந்து நிற்கின்றனர். சிலருக்கு இது வெறும் தாகம் தீர்க்கும் இடமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு தினமும் தவறாமல் வரக்கூடிய பழக்கமாக மாறியுள்ளது. தற்போது கூழ் மற்றும் சர்பத் கடைகளில் பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருவதையும் காண முடிகிறது. அதிகாலையிலேயே எழுந்து கூழ் தயாரித்தல், சர்பத் கலவைகளை தயார் செய்தல், கடையை சுத்தப்படுத்துதல், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுதல் என பல வேலைகளையும் பெண்களே கவனித்து வருகின்றனர். வெயிலில் நின்றபடியே வேலை செய்வது சிரமமாக இருந்தாலும், குடும்பத்தின் வருமானத்திற்காக அவர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த பாரம்பர்ய உணவுகள், இன்று நகர வாழ்க்கையிலும் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளன. அதிக விலையுள்ள குளிர்பானங்களை விட, குறைந்த விலையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கூழ் மற்றும் சர்பத் கடைகள் இன்னும் பலரின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றன.

சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கூழ் மற்றும் சர்பத் கடை வியாபாரிகள் இடப்பற்றாக்குறையை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வியாபாரம் செய்து வந்த இவர்களுக்கு, தற்போது அடிக்கடி இடம் மாறி கடை அமைப்பது சிரமமாக உள்ளதாக கூறுகின்றனர். மக்கள் நடமாட்டம் மாறியதால், முன்புபோல் விற்பனை நடைபெறவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தொழிலில் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்தும் ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளும் அவர்களுக்கு சிரமமாக உள்ளது.

கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்த பழக்கம் இல்லாததால், சில நேரங்களில் பணம் வந்ததா என்பதை சரிபார்ப்பதற்கே மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை இருப்பதாக கூறுகின்றனர். இருப்பினும் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப, இவற்றையும் மெதுவாக கற்றுக்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கூழ், நன்னாரி சர்பத் போன்ற பாரம்பர்ய பானங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், அவற்றை நம்பி வாழும் சிறு மற்றும் குறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கின்றன. வெயிலின் தாக்கத்தை குறைக்கும் இந்த இயற்கை பானங்கள், இன்று பல குடும்பங்களின் அன்றாட வருமானமாகவும் இருந்து வருகின்றன.

தர்ஷினி. சி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *