பொதுமக்கள் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தவேண்டும், எரிபொருளை சேமிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அறிவுறுத்தினார்.
அடுத்த நாள் ஐந்து நாடுகளுக்கு பயணமாகச் சென்றுவிட்டார். இது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த பேட்டியில், “நெருக்கடியான காலங்களில், மக்கள் வெளியே பயணம் செய்ய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி உலகிற்கு அறிவுறுத்தி வரும் நிலையில், அவரோ உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசி இருக்கிறார்.

சரத் பவார் தனது பேட்டியில், “‘நாட்டின் கவுரவத்தை பாதுகாப்பதில் அரசியல் கருத்து வேறுபாடுகள் வரக் கூடாது. நாட்டின் கவுரவம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். பிரதமர் மோடி, இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் நாட்டின் பெருமையைப் பாதுகாக்கப் பணியாற்றி வருகிறார்.
நமக்கு மாறுபட்ட அரசியல் கருத்துகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் கண்ணியம் என்று வரும்போது, அரசியல் வேறுபாடுகளை இடையில் கொண்டுவரக் கூடாது. தேசிய நலன் கருதி கூட்டாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு எழும்போதெல்லாம், இந்தியாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தும் ஒருமித்த நோக்கத்துடன் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் எப்போதும் தங்கள் தலைமையின் மையமாக நாட்டின் எதிர்காலத்தையும் நற்பெயரையும் கொண்டிருந்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் விமர்சித்துள்ளது. ஆனால் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தை நியாயப்படுத்தியுள்ள பா.ஜ.க, நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது. எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு இன்று நாடு திரும்புகிறார்.