திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பெரியாரின் கொள்கையும் பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களையும் பின்பற்றி வருவது திமுகவின் அடிப்படை கொள்ளைகளுள் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட கழகத்தில் இருக்கும் பொதுச்செயலாளரும் திமுகவின் மூத்த தலைவருமான துரை முருகனுடைய பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் இடையேயான திருமணம் சென்னையில் நேற்று (நவ.,1) ஆம் தேதி நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் அரசியல் தலைவர்களான அன்புமணி ராமதாஸ்-சௌமியா அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக நிர்வாகிகள் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் ஆகியோர் இல்லத் திருமண விழாவில் பலரும் பங்கேற்றனர்.
மேலும் திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, துரைமுருகனின் இல்லத்திருமண விழாவில் சமஸ்கிருதம் மந்திரம் ஒலிப்பது என்பது பல தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தனது சமூக வலைத் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுப. வீரபாண்டியன், என் பெருமதிப்பிற்குரிய, என்னிடம் பேரன்பு காட்டும் திமுக கழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம், என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சையான பதிவு
திமுக மூடநம்பிக்கை மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராகவும், சடங்கு சம்பிரதாயத்திற்கு எதிராகவும் சாதி மதம் கடந்து சமூக நீதி பேசும் பெரியாரின் கட்சியில் இருந்து பிரிந்து அதே வழியில் தொடங்கப்பட்ட கட்சி என்பதால், திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் இல்லத்தில் இந்து முறைப்படி சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிட்டு திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது, தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து திமுகவினர் பலரும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
சுயமரியாதை திருமணம் ஏன் பண்ணவில்லை?
நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து பாரம்பரிய முறையில் நடைபெறும் திருமணங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் பயன்படுத்துவது, சாதிய ரீதியான பாகுபாடுகளைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் பெண் விடுதலைக்கு தாலி கட்டும் முறை பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுயமரியாதை திருமணம் மற்றும் இணையேற்பு விழா நடைபெற்று வருகிறது.
ஆனால் துரை முருகன் இல்லத்தில் தாலி கட்டியும், சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி திருமணம் செய்த நிலையில், ஏன் சடங்கு சம்பிரதாயங்களை உடைத்து சுயமரியாதை திருமணம் அல்லது இணையேற்பு விழா நடத்தவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

