
தமிழ்நாடு மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்று (10-09-2026) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :
இன்று (10-09-2026) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏனைய தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
இன்று (10-09-2026) முதல் 14-09-2026 வரை உள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. எனினும் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது.
உள் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகலாம்.
கடலோர தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (10-09-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
வங்கக்கடல் பகுதிகளில் இன்று (10-09-2026) சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.