வேலூர் கம்பன் கழகம் – ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழா! | vellore Kamban kazhagam kannadhasan event

Spread the love

1981இல் இசைஞானி இளையராஜாவும் கலைஞானி கமல் சாரும் ஒரு படத்துக்கு பாடல் எழுத கண்ணதாசனை அழைக்கிறார்கள். கண் தெரியாத ஒரு இசைக்கலைஞனின் காதல் கதை. படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று குழப்பமா இருக்கு என்று கவிஞரிடம் கமல் சார் சொல்கிறார். உடனே ராஜ பார்வைன்னு வைப்பா என்கிறார் கவிஞர். கமல் சாரின் 100வது படத்திற்குத் தலைப்பிட்டவர் கண்ணதாசன்..

இறந்தவர்களுக்கு எழுதப்படுவது இரங்கல் பா.. உலகில் தனக்குத்தானே இரங்கல்பா எழுதிக் கொண்ட ஒரே நபர் கண்ணதாசனாகத்தான் இருக்கும். அதேபோல தான் வளர்த்த நாய் “சீசர்” இறந்தபோது, அதற்கும் ஒரு இரங்கற்பா இயற்றினார். வளர்ப்பு நாயின் மறைவிற்கும் இரங்கற்பா இயற்றிய முதல் கவிஞர் கண்ணதாசன்தான்.

எம்.எஸ்.வி.க்கும் கண்ணதாசனுக்கும் எப்படிப்பட்ட நட்பு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இது இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் வந்த பொருத்தம் அல்ல. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து கொண்டதால் வந்த இணக்கம். அவர் எப்படி இசையமைப்பார் என்பது இவருக்கும் இவர் எப்படி எழுதுவார் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும் . ”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” எனும் பாடல் தோன்றியது அந்தப் பின்னணியில் தான்.. கவிஞர் கண்ணதாசனும் எம்எஸ்வியும் ஒரு பாடலை கம்போஸ் செய்வதே அழகான கவிதையாக இருக்கும் என்பார்கள் இந்தக் காட்சியை பலமுறை பார்த்து ரசித்த கமல் சார்,.”வறுமையின் நிறம் சிவப்பு” படத்தில் “சிப்பிஇருக்குது” பாடலாக உருவாக்கியிருப்பார்,

‘தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’ என எத்தனையோ விமர்சனங்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாய்த் தத்துவங்களைக் கடை பிடித்தவர். கண்ணதாசன்.

“வெயில்காலம் வந்துவிட்டது என்பதற்காக கொக்கு கவலைபடக்கூடாது.

அதோ மழைக்காலம் வருகிறது!”

”மழைக்காலம் வந்துவிட்டது என்பதற்காக நதிகள் ஆா்ப்பரிக்கக் கூடாது.

அதோ வெயில் காலம் வருகிறது”.

வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தெரிந்து தெளிந்தவர் . அதனால்தான்

”மாற்றம் ஒன்றே மானிடத் தத்துவம்” என்று சொன்ன அவரே ‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும் எனச் சொன்னார்..

1961 இல் திமுகவில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசியக் கட்சியில் இணைந்து திருக்கோஷ்டியூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதில் தோல்வியடைகிறார். அதை மனதில் வைத்து அன்னை படத்தில் எழுதிய பாடல் தான்,

“புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை “.

”மானுட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப்பாடி வைப்பேன்” எனச் சொன்னவர். எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருக்குமான பாடல்களைப் படைக்க கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

காதலில் தோற்றுப்போய் அவளைக் காணமுடியாமல் தவிக்கும்போது கண்ணீரோடு எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்…

“கண்கள் இரண்டும் என்று

உன்னைக் கண்டு பேசுமோ!

காலம் இனிமேல் நம்மை

ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ!”

காதலில் வெற்றிடைந்தவர்கள் குதூகலத்தோடு மகிழ்ச்சியில் திளைத்துப் பாட ,

“கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா…..நாம்

கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா!

செல்லாத இடம் நோக்கி செல்லலாமா?”

மற்ற கவிஞர்கள் எல்லாம் வக்கீல்கள் போல வாதாடுவார்கள் .. கண்ணதாசன் மட்டும்தான் நீதிபதியாக நின்று நியாயம் சொல்வார்.

“மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று”

இந்த இரண்டு வரிகள் போதும்… கண்ணதாசனின் மேன்மையைச் சொல்ல!

”வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்”

– தற்கொலை எண்ணம் தலைதூக்கும் போதெல்லாம் தூரத்தில் இருந்து ஒலிக்கும் கண்ணதாசனின் இந்த பாடல், ஒருவனது தற்கொலை எண்ணத்தையே கொலை செய்துவிடும், அவனை வாழ வைத்துவிடும்.

1964இல் வெளிவந்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் ஆறு மனமே ஆறு எனும் ஒரேபாடலில் 8 திருக்குறள்களை எடுத்தாண்டிருப்பார். அவருக்குத் திருக்குறள் முழுவதற்கும், புதுமையான முறையில் உரையெழுத ஆசை இருந்தது ஆனால், நேரமில்லை முப்பாலில் மூன்றாம் பாலாகிய இன்பத்துப் பாலுக்கு மட்டும் அவர் உரை எழுதியிருக்கிறார். காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் காதலிப்பதாகச் சொல்லிச் சுற்றிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல் அது.”

இந்த விழாவில், வேலூர் கம்பன் கழகத்தின் செயலாளர் வெ. சோலைநாதன் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் வேலூர் கம்பன் கழகத்தின் பொருளாளர் அ. திருநாவுக்கரசு, துணைத்தலைவர் கவிஞர் மா.சோதி, இணைச்செயலாளர் வீ. இராசேந்திரன் , துணைச்செயலாளர் மருத்துவர் இனியன் சமரசம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கி. வினோத்குமார், இரா.பா. ஞானவேலு, வி. என். டி. சுரேஷ், முனைவர் ச. இலக்குமிபதி, கவிஞர் சு. சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழியக்கத்தின் பொதுச்செயலாளர் கவியருவி பேராசிரியர் அப்துல்காதர் தலைமையில் “திரை இசைப்பாடல்களுக்குத் தீந்தமிழ் இலக்கியத் தகுதி பெற்றுத் தந்தவை காதல் பாடல்களே! தத்துவப் பாடல்களே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இசைக்கப்பட்ட இசை கச்சேரி நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *