கரூர் – கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம், பத்ரகாளியம்மன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் பிரியாவின் அருகே சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலிச் செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, ஸ்கூட்டரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது, அந்த நபரின் கை அவரது கழுத்துப் பகுதியில் பட்டுள்ளது. ஆனாலும், சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றதால் செயினை பறிக்க முடியாமல், அவர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பிரியா அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகேயிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்படி, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது புகளூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நந்தகுமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே இவர் செயின் பறிப்பில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா என்பது குறித்து தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. த.வெ.க நிர்வாகி ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றதாக போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.