கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவேணி மற்றும் 16 வயது மகள்கள் துர்கா, புனிதா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பணிக்குச் சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது, ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரத்தக்காயங்களுடன் அவர் மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தோகைமலை காவல் நிலைய போலீஸார் பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.