முதல் பாதியில் குடும்ப சென்டிமென்ட், கலாசாரப் பின்னணியிலிருந்து விலகியிருக்கும் சமந்தா, மருமகள்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி போன்றவை நல்லதொரு கலாட்டா! ஆனால், தேவைக்கு அதிகமாகவே அவை நீள்வதால் ‘ஆக்ஷன் மோடு எப்ப சார்?’ என வாய்விட்டே கேட்க வைக்கிறார்கள். அதன் பின்னர் வேகமெடுக்கும் திரைக்கதை, வில்லனின் ரீ-என்ட்ரி, அது தரும் பரபரப்பு என நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சற்று அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது போன்ற உணர்வைத் தந்தாலும் அந்த இடைவேளை காட்சி ஆறுதல்! முதலமைச்சர் வருகை, அதன் பின் நடக்கும் சதி, சமந்தாவின் ரகசியம் வெளிப்பட்டுவிடும் ஆபத்தான நிலை என இரண்டாம் பாதிக்கு அங்கே நல்லதொரு ஸ்கெட்ச் போட்ட உணர்வு!
ஆனால், ஆரம்பத்தில் மிரட்டலாக அறிமுகமாகும் வில்லன் குல்ஷன் தேவைய்யா கதாபாத்திரம், சமந்தாவின் மாஸ் அவதாரத்துக்குப் பிறகு வழக்கமான அடிவாங்கும் வில்லனாக மாறி டம்மியாகிப் போவது ஏமாற்றமே! திருமண வீட்டில் அவர் செய்யும் கலாட்டாவிலும் சுவாரஸ்யமில்லை. இதுதான் க்ளைமாக்ஸ் என்று தெரிந்த பின்னரும், குல்ஷன் – சமந்தா சந்திப்பு காட்சியும், வீட்டுக்குள் நடக்கும் க்ளைமாக்ஸ் ஷூட் அவுட்டும் தேவைக்கு அதிகமாகவே நீண்டுவிட்ட உணர்வு! அதேபோல, சமந்தாவின் பாத்திரம் ஆக்ஷனில் கபடி ஆடுகிறதே தவிர, புத்திசாலியாக எதுவும் செய்யாமல் ஏமாற்றவே செய்கிறது. க்ளைமாக்ஸில் வரும் வெண்ணிலா கிஷோரின் நகைச்சுவை கேமியோ, அநாவசியம் என்றாலும் சிரிக்க வைப்பது ஆறுதல்!