1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை – அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

Spread the love

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக குதிரை உள்ளிட்ட கால்நடை சந்தை நடைபெறுவதும் வழக்கம்.

தேர் திருவிழா

நூற்றாண்டு பாரம்பர்யம் கொண்ட இந்த கால்நடைச் சந்தையில் தமிழ்நாடு மட்டுமன்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 12- ம் தேதி தொடங்கி 16- ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் பங்கேற்றனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கால்நடைச் சந்தையில் பிரமாண்டமான ஜாஃப்ராபாடி எருமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இந்த எருமை குறித்து பகிர்ந்த உரிமையாளர் துரை , “‌அசல் ஜாஃப்ராபாடி எருமை ( Jafarabadi) இனத்தைச் சேர்ந்தது. சுமார் 1.5 டன் எடை உள்ளது. மேலும் சில டன் வரை எடை கூடும். 7 அடி உயரம். மேலும் 9 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட எருமையின் வயது வெறும் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை எருமைகள், அவற்றின் பிரமாண்டமான உடல் அமைப்புக்காகவே தனி கவனம் பெறுகின்றன.

ஜாஃப்ராபாடி எருமை

கிட்டத்தட்ட குட்டி யானையைப் போல பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த எருமை, பழகும் குணத்தில் குழந்தையைப் போல அமைதியாக காணப்படும். அதேவேளையில், எருமை இனங்களிலேயே அதிக அளவில் பால் கொடுக்கும் தன்மை கொண்ட இனங்களில் இதுவும் ஒன்று. திருவிழாவிற்கு வருகைத் தந்த பக்தர்கள், சாமி தரிசனத்துடன் இந்த பிரமாண்ட எருமையையும் ஆர்வத்துடன் பார்த்து, அதன் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர். 5 லட்சம் ரூபாய்க்கு கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *