10 அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்… அடுத்தது அதிரடி Action? – Kumudam

Spread the love

‘யார் என்றெல்லாம் பார்க்கமாட்டேன், பதவியிலிருந்து தூக்கிவிடுவேன்…’ – இது சமீபத்தில் முதல்வர் விஜய், அமைச்சர் ஒருவரிடம் அனலாக கக்கிய வார்த்தைகள். ஆம், சட்டமன்றத்தில் தி.மு.க. மீது காட்டிய கோபத்தை கொஞ்சமும் சூடு குறையாமல் தன் அமைச்சரவை சகாக்கள் மீதும் காட்டியிருக்கிறார் விஜய் என்பதுதான் தலைமைச் செயலகத்தில் ஹாட் டிபேட்!

தலைமைச் செயலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் நபர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட விரைவில் தங்கள் பண்புகளை வளர்த்துக்கொள்வார்கள் என்று முதல்வர் விஜய் நம்பினார். ஆனால், 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அந்த தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் அடாவடியில் ஈடுபட்டுவருவது, விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போதைப்பொருள் உபயோகித்தாரா சரத்குமார்?

இப்படி தாறுமாறான நடவடிக்கைகளில் முதலிடத்தில் இருப்பவர் அமைச்சர் சரத்குமார். பொது இடத்தில் வெளிப்படையாகவே போதைப் பவுடரை பயன்படுத்தியாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு விஜய்யை பெரிதும் வேதனை அடைய வைத்திருக்கிறது. ‘தி.மு.க ஆட்சியாளர்களால்தான் போதைப் பொருள் கலாசாரமே தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்று சட்டமன்றத்தில் நானே குற்றம்சாட்டியிருக்கிறேன். இப்படிப்பட்ட நேரத்தில் நமது அமைச்சரே அதில் சிக்கினால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? என சீனியர்களிடம் கோபத்தை காட்டியிருக்கிறார் விஜய்.

ஹிட் லிஸ்ட்டில் 10 அமைச்சர்கள்!

அதேபோல் பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, மணல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் அமைச்சர் பிரபு, குடும்ப உறவு தலையீட்டை அனுமதிக்கும் அமைச்சர்கள் கமலி, ரஞ்சித்குமார், ராஜீவ், விஜய் பாலாஜி, பந்தா பேர்வழியான ஸ்ரீநாத், மக்கள் சேவையில் ஆர்வமில்லாத குமார் என 10 அமைச்சர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பதவி இழக்க நேரிடும் என்றும் முதல்வர் எச்சரித்திருக்கிறார்.

பெண் அமைச்சர்களின் அடாவடி

பெண் விருதுநகரைச் சேர்ந்த அமைச்சர்களான கீர்த்தனா, ஜெகதீஸ்வரி இருவரின் நடவடிக்கைகளுமே முதல்வருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. இருவருக்கும் இடையே தங்கள் மாவட்டத்தில் யார் பெரியவர் என்ற ஈகோ உச்சத்தில் உள்ளது. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனாவிடம் இன்னமும் ரீல்ஸ் மோகம் குறையவில்லை என்பது புகார். அவரிடம் ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் ஜெகதீஸ்வரியும், கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை அவமரியாதை செய்து வருவதாக முதல்வர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இருவர் இடையிலான மோதலில் ஜெகதீஸ்வரி ஏற்கெனவே பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் கொண்டிருந்த நட்பு தொடர்பான படங்கள் வெளியாகி த.வெ.க. அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்பா – மாமனார் தலையீடு

கால்நடை துறை அமைச்சரான கமலி, பணி மாறுதல் கோரும் அரசு அலுவலர்களிடம், ‘சும்மா டிரான்ஸ்ஃபர் கேட்டால் எப்படி.? என கேட்டதாக புகார் பறந்திருக்கிறது. அவரின் அப்பா செந்தில்நாதன், நாமக்கல் மாவட்ட த.வெ.கவில் பொறுப்பு வகித்தவர். பாலியல் புகாரில் சிக்கி, கட்சிப் பதவி பறிக்கப்பட்ட பிறகும்கூட, தனது மகளின் துறைகளில் தலையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்தங்களை கையாள்வதும் புகார்களாக மாறியிருக்கின்றன.

சுற்றுச்சூழல் துறையில் எது ஒன்றும் தனக்குத் தெரியாமல் நடக்கக் கூடாது என உத்தரவே போட்டிருக்கிறாராம் அமைச்சர் ராஜீவ்வின் மாமனார் விஜயபாஸ்கர். இவர் ஏற்கெனவே சுற்றுச்சூழல் வாரியத்தில் உறுப்பினர் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பதால், எந்தெந்த வழியில் ஆதாயமடையலாம் என திட்டம் போட்டு செயல்படுகிறார் என்கிறார்கள்.

கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் அப்பா, துரை கருணாநிதியின் தலையீடு, துறையில் அதிகம் என்கிறார்கள். இவர் திருச்சி மாவட்ட த.மா.கா.வில் பொறுப்பில் இருந்தவர் என்பதால், இவரே குவாரி உரிமையாளர்களிடம் பேசி லட்டுகளை உருட்டத் தொடங்கிவிட்டார்.

சகலை – தம்பி ஆட்டம்!

வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாருக்கு எல்லாமாக இருப்பது அவரின் சகலைதான். சகலையும் காஞ்சிபுரத்தில் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேசி உத்தரவு பிறப்பித்து வருகிறார் என புகார்கள் எழுந்துள்ளன. இதே மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான தென்னரசுவின் ஆதரவாளர்களே, ‘காங்கிரஸ், அதிமு.க என பல கட்சி மாறி வந்த ரஞ்சித்குமார், தலைமைச் செயலகத்திலோ, காஞ்சிபுரம் மாவட்டத்திலோ மக்களிடம் குறைகளைக் கேட்பதே இல்லை. அவர் ஏற்கெனவே இருந்த பழைய கட்சியினருக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் வழங்குகிறார். இதற்காகவே புரோக்கர்களையும் நியமித்திருக்கிறார்’ எனவும் புகார் தட்டி விட்டிருக்கிறார்கள்.

ஈரோட்டைச் சேர்ந்த கைத்தறி அமைச்சர் விஜய் பாலாஜிக்கு உடன்பிறந்த தம்பி முரளிதான் எல்லாமும். ஏற்கெனவே அமைச்சரானதும் விஜய் பாலாஜியின் செயல்பாடுகளும் பேச்சுமே தடாலடியாக மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், துறையிலும் அவரின் தம்பியின் ஆதிக்கம் அதிகம் என புகார்கள் எழுகின்றன.

பந்தா அமைச்சர்கள்

தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், காரில் இருந்து இறங்கியதும் உதவியாளர் ஓடிவந்து அமைச்சருக்கு கோட் அணிவிக்கும் வீடியோ வெளியாகி கடும் விமர்சனமானது. சென்னையைச் சேர்ந்த ஏ.ஐ. அமைச்சர் குமார், தொகுதி மக்களை சந்திப்பதில்லை. கோரிக்கை கொடுக்க வீட்டுக்கு வந்தால், வாரத்தில் ஒருநாள்தான் மனுக்களையே பெறுவேன் என திமிராக பேசுவதாக புகார் சென்றிருக்கிறது. இந்த பத்து அமைச்சர்களும் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வர் விஜய் யோசனையில் இருக்கிறார்.

இவர்களைப்போல சீரியஸான புகார்களில் சிக்காத அதேசமயம் சர்ச்சைகளில் சிக்கிய கே.ஏ.செங்கோட்டையன், தமிழன் பார்த்திபன் ஆகிய அமைச்சர்களும் பொறுப்புணர்வோடு பேச வேண்டும் என முதல்வர் நேரடியாகவே எச்சரித்திருக்கிறாராம்” என்று விரிவாக கூறி முடித்தார்.
மாஸ்டர் ஆக்ஷனுக்காக வெயிட்டிங்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *