ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தலைமையில் உருவாக்கப்பட்ட ‘MMX’ (Martian Moons Exploration) விண்கலம், அக்டோபர் 20-ம் தேதி அதிகாலையில் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட சுமார் 71 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலம் ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்து தனது பயணத்தைத் தொடங்கியது.
எதற்கு இந்த திட்டம்?
செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ் (Phobos), டைமோஸ் (Deimos) என இரண்டு நிலவுகள் இருக்கிறது. இவற்றில் போபோஸ் நிலவிலிருந்து மண், தூசி, பாறை மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் இந்தத் திட்டத்தின்படி, விண்கலம் 2027 ஆகஸ்ட்டில் செவ்வாய் கிரகத்தை அடையும். பிரான்ஸ், ஜெர்மனி இணைந்து உருவாக்கிய ‘ஐடெபிக்ஸ்’ (Idefix) என்ற சிறிய ரோவர், 2028-ன் பிற்பகுதி அல்லது 2029-ல் போபோஸ் நிலவில் தரையிறங்கி, சுமார் 100 நாள்கள் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், முக்கிய விண்கலம் போபோஸ் நிலவில் தரையிறங்கி, குறைந்தது 10 கிராம் மண், தூசி, பாறை மாதிரிகளைச் சேகரிக்கும். தொடர்ந்து டைமோஸ் நிலவையும் ஆய்வு செய்துவிட்டு, 2031-ல் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.