ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் பிறந்து, புதியதொரு தேசத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, வெறும் 23 வயதில், பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் மேயர் பதவியை எட்டி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் துஷார் குமார்.
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பாரம்பரியமிக்க “எல்ஸ்ட்ரீ மற்றும் போரஹாம்வுட்’ (Elstree and Borehamwood) நகரத்தின் புதிய மேயராக அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ள இந்தச் செய்தி, உலகெங்கும் வாழும் இந்தியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
துஷார் குமார் தனது 10 வது வயதில், அதாவது 2013-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார். புதிய சூழல், புதிய மனிதர்கள் என எல்லாமே சவாலாக இருந்தாலும், மிகக் குறுகிய காலத்திலேயே அங்கிருக்கும் கலாசாரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். லண்டனின் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்துப் பட்டம் பெற்ற இவருக்கு, மாணவர் பருவத்திலிருந்தே சமூக சேவையிலும் அரசியல் ஆளுமையிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது.