125 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 25 நாள் வேலை வழங்க ரூ.9,192 கோடி தேவை என்றும், அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு & வாழ்வாதார உறுதித் திட்டத்தின்படி கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்குவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது என்றாலும் கூட, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அரசின் நோக்கத்தை நிறைவேற்ற போதாது.

தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், அத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்த மத்திய அரசு, ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்துடன் கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இப்போது ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.