`சில சிவப்பு கம்பளங்களில் பிரபலங்கள் வெறுமனே நடந்து செல்வார்கள், ஆனால் ஐஸ்வர்யா ராய் பச்சன் அடியெடுத்து வைக்கும் சிவப்பு கம்பளங்கள் உயிர்பெற்று எழுகின்றன” எனும் வாக்கியம் பாலிவுட் ஃபேஷன் உலகில் மிக பிரபலம்.
79வது கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தியாவின் கேன்ஸ் ஐகானாக வலம்வரும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒருமுறை கேமராக்களின் பார்வைக்காக மட்டும் வரவில்லை; ஃபிளாஷ் பல்புகள் ஓய்ந்த பிறகும் மக்களின் மனதில் நீங்காத ஒரு முத்திரையைப் பதிக்க வந்திருந்தார். இந்த ஆண்டு, பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Luminara
முன்னாள் உலக அழகியும், லோரியல் பாரிஸ் நிறுவனத்தின் தூதருமான ஐஸ்வர்யா, இந்திய ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால் பிரத்யேகமாக வடிவமைத்த ‘லுமினரா’ (Luminara) எனும் கவுனில் சிவப்பு கம்பளத்தில் தோன்றியபோது, மொத்த கேமராக்களின் கவனமும் அவர் மீதே இருந்தது.
அது ஒரு ஆடை என்பதை விட, ஒரு இயற்கை சக்தி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். சுற்றியுள்ள ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் ஆழமான நீல நிறத்தில், அந்த ஆடை ஒரு சிற்பம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. வடிவமைப்பாளர் அமித் அகர்வாலின் தனித்துவமான ‘பயோமிமிக்ரி’ (Biomimicry) பாணியில், இறக்கைகள் போன்ற தோள்பட்டை நீட்சிகள், ஐஸ்வர்யாவிற்கு ஒரு விண்ணுலக தேவதைக்கும், நடமாடும் கலைப்படைப்பிற்கும் இடைப்பட்ட ஒரு தோற்றத்தைக் கொடுத்தது என வர்ணிக்கிறார்கள்.