மருத்துவ உலகம் வியந்து பார்க்கும் ஒரு அசாத்திய சாதனை இந்தியாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
லைபீரியா நாட்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி (Hepatitis B) மற்றும் தீவிர கல்லீரல் புற்றுநோய் ஆகிய மூன்று கொடிய நோய்களால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.
எவ்வித நம்பிக்கையும் இல்லாத சூழலில், இந்திய மருத்துவர்களின் அசாத்திய திறமையாலும், ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையினாலும் அந்தப் பெண்மணி இந்த மூன்று நோய்களையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி முற்றிலும் குணமடைந்து புது வாழ்வு பெற்றுள்ளார்.
இந்தப் பெண்மணி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹெபடைடிஸ் பி பாதிப்புடனும், மூன்று ஆண்டுகளாக எச்.ஐ.வி பாதிப்புடனும் போராடி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் மற்றும் கல்லீரலில் பல இடங்களில் புற்றுநோய் கட்டிகள் என அவரது ஒட்டுமொத்த உடலும் செயலிழக்கும் நிலைக்குச் சென்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான், அவர் உயர்தர சிகிச்சைக்காக இந்தியாவை நாடி வந்தார். இங்கு வந்த பிறகு, அவருக்கு உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சவாலான முடிவை மருத்துவர்கள் எடுத்தனர்.