பிசினஸ் மேனேஜர்’ விசா
ஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வந்த மனிஷ் குமார் என்பவரின் வாழ்க்கை, ஒரே ஒரு அரசு உத்தரவால் தலைகீழாக மாறியிருக்கிறது.
தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா புதுப்பிப்பு விண்ணப்பத்தை ஜப்பான் குடிவரவுத் துறை நிராகரித்ததால், தனது உழைப்பால் உருவாக்கிய உணவகத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டோக்கியோவில் நடந்த ஒரு போராட்டத்தின்போது, தனது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாகக் கூறி அவர் கண்ணீருடன் கதறியது, ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழில்முனைவோர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சைதாமா மாகாணத்தில் இந்திய உணவகம் நடத்தி வரும் மனிஷ் குமார், போராட்டத்தின்போது தனது நிலையை உருக்கமாக விளக்கினார். “இரண்டு வாரங்களுக்கு முன்பு, குடிவரவு சேவை ஏஜென்சி (ISA) அதிகாரிகள் என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்படி கூறினார்கள். என் குழந்தைகள் இருவரும் ஜப்பானில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும், அவர்களின் நண்பர்கள் அனைவரும் ஜப்பானியர்கள்தான். இப்படிப்பட்ட சூழலில் எங்களை இந்தியாவுக்குத் திரும்பிப் போகச் சொன்னால், நான் என்ன செய்வேன்?” என்று கண்ணீருடன் அவர் எழுப்பிய கேள்வி, அங்கிருந்தவர்களை உலுக்கியது.
மனிஷ் குமாரின் இந்த அவலநிலை, ஒரு தனிநபரின் சோகம் மட்டுமல்ல. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜப்பான் அரசு தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா அமைப்பில் கொண்டுவந்த அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு, அங்குள்ள சிறு தொழில் உரிமையாளர்களிடையே பெருகிவரும் பதற்றத்தின் சின்னமாகவே இது பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அக்டோபர் 2025-ல் புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் 96 சதவீதம் சரிந்துள்ளன. மாதந்தோறும் சுமார் 1,700 ஆக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் 70 ஆகக் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.