உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், அக்டோபர் 4-ம் தேதி தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், நான் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள்.
மேலும், அந்தத் தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இன்பத்துரையின் தேர்வு செல்லாது என்றும், சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களிலும் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இன்பத்துரையின் பெயரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக என் பெயரை பதிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இறுதியாக நீதி வென்றுள்ளது.
இத்தனை காலங்களாக நாங்கள் அனுபவித்த அத்தனை வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாண்புமிகு நீதியரசரின் இன்றைய தீர்ப்பு ஒரு சிறந்த நிவாரணமாகக் கிடைத்துள்ளது. எனவே, இந்த நீண்ட காலதாமதம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வரலாற்று வெற்றியை நம்முடைய மாண்புமிகு மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும், முன்னாள் முதல்வர் பாதத்திலும் காணிக்கையாக்குகிறேன்.” என்றார்.