கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. அதே சமயம் அன்றைய தினம் மீட்புப்பணிகளை முடுக்கிவிடாமல் முதல்வர் வி.டி.சதீசன் ஒரு மதிய விருந்தில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
மேலும், முதல்வர் பயணத்துக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தியது பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இன்று திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், “மாநில பேரிடர் நிவாரணத் துறை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காலை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரிப்போர்ட்கள் பெறப்பட்டுள்ளன.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் வெள்ளம் தேங்கியுள்ளது. மற்ற இடங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக கொல்லத்தில் இருந்து 14 படகுகள் செங்கன்னூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும், காவல்துறையும், தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்களில் 11,018 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், இடுக்கி, கொல்லம், மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 பேரைக் காணவில்லை. முதற்கட்ட அறிக்கையின்படி 165 ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 3,596 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு 10,000 ரூபாயும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குத் திரும்பும்போது அவசரத் தேவைகளுக்காக 10,000 ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.