நாணயம் விகடன் 22-ம் ஆண்டில் கொண்டாட்டத்துடன் காலடி எடுத்து வைக்கிறது. முதலீட்டு உலகத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்துவதிலும், நெறிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பர்சனல் ஃபைனான்ஸ் இதழாக, உங்கள் தோளோடு தோள் நின்று கடமையாற்றி வருகிற மகிழ்வோடும், பொறுப்புணர்வோடும் இந்தப் பயணத்தைத் தொடர்கிறோம்.
சேமிப்பு, முதலீடு, பங்குச் சந்தை, காப்பீடு, பிசினஸ் எனப் பணம் மற்றும் பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் வாசகர்களுக்கு எளிமையாகவும், சரியாகவும் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இப்பணியில், கண்கூடாகக் கண்ட பலன்கள் பல. நம் வாசகர்கள் பங்குச் சந்தையைப் பற்றி நம்மிடம் கலந்துரையாடும்போதும், மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி ஆலோசிக்கும்போதும், நாணயம் விகடன் மூலம் அவர்கள் பெற்றிருக்கும் நிதிக் கல்வியறிவு (Financial Literacy) பெருமிதம் தருகிறது.
எப்போதுமே வாசகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைத் தேடித்தேடி கொடுப்பதுதான் நாணயம் விகடனின் ஸ்பெஷல். அந்தவகையில், 22-ம் ஆண்டுச் சிறப்பிதழிலும் சமகாலத்தின் தேவைக்கேற்ப புதிய தொடர்களையும், கட்டுரைகளையும் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறோம்.
நம்மில் பலருக்குமே கோடி ரூபாய் சேர்ப்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். ‘ஐதாட்’ நிறுவனர் ஷியாம் சேகர் எழுதும் ‘ஒரு கோடி கிளப்… குரோர்பதி ரகசியம்’ என்ற தொடர் அவ்வழியை உங்களுக்குக் காட்டும். ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, அதுதொடர்பாக நாம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பதிவு செய்யும் ‘எந்த ஏரியா என்ன விலை? ரியல் எஸ்டேட் @தமிழ்நாடு’ தொடர் இந்த இதழில் தொடங்குகிறது.
டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிக்கல்களையும், குழப்பங்களையும் சந்திக்கிறோம். சிலர் சைபர் மோசடிகளிலும் சிக்கிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க நமக்கு டிஜிட்டல் எஜுகேஷன் வழங்க வருகிறார் ‘அலர்ட்’ ஆறுமுகம். இதுமட்டுமல்லாமல், ரஜினி முதல் எலான் மஸ்க் வரை, கோல்கேட் முதல் ரிலையன்ஸ் வரை கொடிகட்டிப் பறக்கும் பிராண்டுகளுக்குப் பின்னால் இருக்கும் சீக்ரெட்டுகளைப் பேசும் ‘ஸ்டார் பிராண்டிங் சக்சஸ் சீக்ரெட்ஸ்’ தொடரும் அணிவகுக்கிறது. நீண்டகாலமாக வாசகர்கள் எதிர்பார்க்கும் ‘ஷேருச்சாமி’, பங்குச் சந்தையில் நடக்கும் விஷயங்களை வாராவாரம் ஆரவாரமாக அலச ‘கம்பேக்’ கொடுக்கிறார்.
இன்னும் இன்னும் புதிய பகுதிகளுடன், கட்டுரைகளுடன் உங்களின் நிதி வழிகாட்டியாகக் கூடவே வரும் நாணயம் விகடனுக்கு 22 ஆண்டுகள் என்பது பெருமைக்குரிய மைல்கல். இதற்குத் துணையாக நிற்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. நாணயம் விகடனின் இந்தப் பயணத்தில், பந்தத்தில் என்றென்றும் இணைந்திருப்போம்!
– ஆசிரியர்