International
oi-Vignesh Selvaraj
தி ஹேக்: ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், குழந்தைகள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சொந்த நாட்டுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன. இந்த கொடூரத் தாக்குதல்களால் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாக தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக, மியான்மர் அரசு மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 15 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்ற அமர்வு, 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு கொலை செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக உறுதி செய்துள்ளது. மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகள் ரோஹிங்கியா மக்களின் ஒரு பகுதியை அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை என்று தெரிவித்தது.
மேலும், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றதற்கு ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பும் மியான்மர் அரசுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளள்ளது.
இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மியான்மர் நாட்டை இனப்படுகொலை குற்றத்துக்கு பொறுப்பாக்கி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் வன்முறை மற்றும் உக்ரைன் போர் ஆகியவை குறித்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.