புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தெற்கு வெள்ளாற்றின் வடகரை ஓரங்களில் நார்த்தாமலைக்கு எதிரே உள்ள தொடையூர் போன்ற பல இடங்களில் ஏகப்பட்ட பெருங்கற்காலப் புதைகுழிகள் (Burial sites) கிடைத்துள்ளன.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள நெடுங்கற்கள் கால ஓட்டத்தில், மண் அரிப்பால் சரிந்து விழுந்து கிடக்கின்றன. இதேபோன்றதொரு நெடுங்கல் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உள்ள ராங்கியம் காட்டுக்குள்ளும் நின்ற நிலையில் காணப்படுகிறது. ஆனால், அதன் உயரம் மிகவும் குறைவு.
பின்னங்குடி அதிசயம்:
ஆனால், இந்த பின்னங்குடி ‘நெடுங்கல்’ மட்டும்தான் 2,500 ஆண்டுகளாக புயல், மழை, வெயில் என எதற்கும் அசராமல், இன்னும் அதே 15 அடி கம்பீரத்தோடு நின்ற நிலையிலேயே நேராக இருக்கிறது. இதுதான் இதன் ஆகப்பெரும் வியப்பு. இந்த மாபெரும் நெடுங்கல்லுக்கு அரணாக, இதன் அருகிலேயே 5 அடி உயரத்தில் மேலும் இரண்டு குட்டி நெடுங்கல் பலகைகளும் ஊன்றப்பட்டுள்ளன…” என்று ஆச்சரியத்துடன் பேசிய பேராசிரியர் சுப. முத்தழகன் நம்மிடம் மேலும் பகிர்ந்து கொண்டதாவது:
” இதன் மிகத்துல்லியமான காலத்தைக் கணிக்க அங்கே கிடைக்கும் பானை ஓடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றாலும், தோராயமாக இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறலாம். வரலாற்றை ‘எழுத்துச் சான்றுகள் இல்லாத காலம்’ (Pre-historic period), ‘எழுத்துச் சான்றுகள் உள்ள காலம்’ (Historical period) எனப் பிரிப்பார்கள். சங்க காலம் என்பது எழுத்துச் சான்றுகள் உள்ள வரலாற்றுக்காலம். ஆனால், இந்த நெடுங்கல் எழுத்துப் பொறிப்புகள் தோன்றுவதற்கு முற்பட்ட, ‘வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச்’ சேர்ந்த அரிய சான்றாகும்!”

சங்க இலக்கியம் காட்டும் சான்று:
இந்த நெடுங்கற்கள் ஏதோ கதையல்ல, நம் மூதாதையர்களின் வாழ்வியலோடு கலந்தவை என்பதற்கு சங்க இலக்கியங்களே சாட்சி பகிர்கின்றன. “நட்ட போலும் நடா நெடுங்கல்…!” என்கிறது அக நானூறு. அதாவது, தொலைவிலிருந்து பார்ப்பதற்கு யாரோ ஒரு மனிதன் நேராக நிமிர்ந்து நிற்பது போலத் தோன்றும் இந்த நெடுங்கற்கள் பற்றி நம் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் கூட இந்த ‘முதுமக்கள் தாழி’ மற்றும் ‘நெடுங்கல்’ பற்றிய குறிப்புகள் ஏராளமாக உண்டு எனச் சான்று பகிர்கிறார் சுப. முத்தழகன்