India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மதரஸாக்கள் தொடர்பாக மாநில அரசு மேற்கொண்டுள்ள ஆய்வை தொடர்ந்து முதல் கட்டமாக 252 மதரஸாக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படும் 100 மதரஸாக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி மற்றும் அங்கீகார ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால் இந்த மதரஸாக்களும் மூடப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் நடந்து வந்தது. இருப்பினும், கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவே தோல்வி அடைந்தார்.

மதரஸாக்கள் மூடல்
இதற்கிடையே புதிதாக அமைந்துள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அங்குள்ள மதரஸாக்களை ஆய்வு செய்தன. அதில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கியதாக சொல்லி 252 மதரஸாக்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 252 மதரஸாக்களில் பெரும்பாலானவை காரிஜி பிரிவை சேர்ந்தவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக மால்டா மாவட்டத்தில் 44 மதரஸாக்கள் உள்ளன. உத்தர் தினாஜ்பூரில் 37, தெற்கு 24 பர்கானாஸில் 32 மதரஸாக்களும், நாடியா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் தலா 25 மதரஸாக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேலும் 100 மதரஸாக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மதரஸாக்கள் தங்களிடம் உள்ள முறையான அங்கீகாரம் அல்லது அனுமதிக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் குடிராம் டுடு தெரிவித்துள்ளார். ஒருவேளை உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் இந்த மதரஸாக்களும் மூடப்படும்.
நோட்டீஸ்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முதல் கட்டமாக 252 மதரஸாக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தீவிரமான முறைகேடுகள் கண்டறியப்பட்ட 100 மதரஸாக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால் அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேற்கு வங்கத்தில் பல நூறு மதரஸாக்கள் உள்ளன. அதில் எவையெல்லாம் உரிய அங்கீகாரத்தோடு இயங்குகின்றன.. எவை உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன என்பதை கண்டறிவதற்காக ஜூன் மாதம் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை சார்பில் கொல்கத்தா உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாஜக
இந்த ஆய்வின்போது மதரஸாக்களின் நிர்வாக அமைப்பு, மாணவர்களின் சேர்க்கை விவரங்கள், நிதி எங்கிருந்து வருகிறது, நிறுவனங்களின் பதிவு மற்றும் அங்கீகார நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மேற்கு வங்கத்தில் 2,132 மதரஸாக்கள் முறையான அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் குடிராம் டுடு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், 2,396 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்தே மதரஸாக்களை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதரஸாக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை மேற்கு வங்க அரசியலில் வார்த்தை போரையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா மாநில அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார். எல்லை பகுதிகளில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், மதரஸா கல்வி என சொல்லி கொண்டு, தேச விரோத நடவடிக்கைகள் நடைபெறுவதை தடுப்பது அரசின் பொறுப்பு என்றும் அதனடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திரிணாமுல் எதிர்ப்பு
அதேநேரம் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் இதை கடுமையாக விமர்சித்துள்ளது. திரிணாமுல் எம்எல்ஏ குணால் கோஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதரஸாக்கள் என்பவை ஒரு கல்வி முறையே என்றும் மதரஸாக்களை பயங்கரவாதம் பரப்பும் அமைப்பு மூலம் சித்தரிக்க முயல்வது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

