39 வயதில் எழுதிய தேர்வுக்கு 60 வயதில் வந்த அரசு வேலை கேரள பிஎஸ்சி அலட்சியத்தால் முதியவர் அதிர்ச்சி! | Government job got delayed more than 20 years

Spread the love

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதே சமயம், கேரளாவில் இளம் வயதில் எழுதிய தேர்வுக்கு சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின், அவர் பணி ஓய்வு பெறும் வயதை எட்டிய போது பணி நியமன பரிந்துரை கடிதம் வந்து சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் ​மலப்புறம் மாவட்டம் காளிகாவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் கடந்த 2005-ம் ஆண்டு, கேட்டகிரி நம்பர் 229/2005-ன் கீழ், பகுதி நேர இளநிலை அரபு மொழி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதினார். ​தேர்வு எழுதும்போது அவருக்கு 39 வயது. இந்தத் தேர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் 3 ஆண்டு கால வரம்பு கடந்த 2008-ம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது.

பொதுவாக, காலாவதியான பட்டியலிலிருந்து பணி நியமனங்கள் செய்யப்பட மாட்டாது என்பதால், தனக்கு வேலை கிடைக்காது என அவரும் அந்த ஆசையைக் கைவிட்டார். ​கேரள அரசு விதிகளின்படி, ஒரு தற்காலிக அறிவிப்பின் அதிகபட்ச காலவரம்பு 3 மாதங்கள் மட்டுமே. விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் இந்த அறிவிப்பு 3 முறை வெளியிடப்பட்டாலும், ஒட்டுமொத்த செயல்முறையும் ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஒரு காலிப்பணியிடத்தை நிரப்ப பி.எஸ்.சி 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

​இறுதியாக 11.01.2022 அன்று திருச்சூர் பி.எஸ்.சி அலுவலகத்திற்கு “பணியில் சேராத காலிப்பணியிடமாக’ இது அறிக்கை செய்யப்பட்டது. அங்கிருந்து அப்துல் மஜீதுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திருச்சூர் அலுவலகம் இந்த விவரத்தை மஜீத்திடம் கொண்டு சேர்க்க மேலும் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இறுதியாக, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி (24.04.2026) பி.எஸ்.சி-யிடம் இருந்து அட்வைஸ் மெமோ அனுப்பப்பட்டு, 26.04.2026 அன்று அது மஜீத்துக்கு கிடைத்தது.

அப்துல் மஜீத்

அப்துல் மஜீத்

அப்துல் மஜீதின் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழின்படி அவரது பிறந்த தேதி 27.05.1966 ஆகும். எனவே அவருக்குப் பணி நியமன ஆணை கிடைத்த அடுத்த ஒரு மாதத்திற்குள், அவருக்கு 60 வயது நிறைவடைந்து, அரசு விதிகளின்படி அவர் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார். இதனால் அவரால் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.​

இருப்பினும், தனது பள்ளிச் சான்றிதழில் பிறந்த தேதி தவறாகப் பதிவாகியுள்ளதாகவும், தனது உண்மையான பிறந்த வருடம் 1967 என்றும் மஜீத் கூறுகிறார். இந்தத் தவறு திருத்தப்பட்டால், தம்மால் குறைந்தபட்சம் ஓராண்டாவது அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் எனக்கூறும் அவர், மனிதாபிமான அடிப்படையில் தனக்கு நீதி வழங்க வேண்டும் என மாநில கல்வி அமைச்சரிடமும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஷம்சுதீனிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *