International
oi-Velmurugan P
நியூயார்க்: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பரிசு என்ற பெயரில் ரொக்கப்பணத்தை தேர்தல் காலங்களில் வழங்குவதை ஆளும் கட்சிகள் வழக்கமாக வைத்துள்ளன. அதேபோல் நாங்கள் ஜெயித்தால் மகளிருக்கு உரிமை தொகை வழங்குவோம் என்று அறிவித்து வழக்கின. இதே பாணியில்,அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாகும், திமுகவை விமர்சிக்கும் விதமாகும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை, விலையில்லாமல் வழங்கப்படும் பொருட்கள் , பொங்கல் பரிசு போன்ற கவர்ச்சிகரமான நிதி உதவி வழங்கி வாக்காளர்களை அரசியல் கட்சிகள் கவருகின்றன . இதில் இதுவரை ஆண்ட திமுக, அதிமுக போன்ற கட்சிகளாகட்டும், தற்போது ஆட்சியில் உள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு ஆகட்டும் எல்லா கட்சிகளுமே ஒரே மாதிரி தான் சிந்திக்கின்றன.

தமிழ்நாடு பாணியில் தான் எல்லா மாநிலங்களிலும் தற்போது வாக்காளர்களுக்கு ஜெயித்தால் பணம், இலவச பரிசு பொருட்கள் என்பது போல் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் களமாடுகின்றன. இந்த சூழலில் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த விஷயத்தை அமெரிக்காவே காப்பி அடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள இந்த “$5,000 டிரம்பின் டிவிடெண்ட்” திட்டம் அப்படியே தமிழ்நாட்டின் காப்பி என்று விமர்சனம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கடந்த புதன்கிழமை நடந்த குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்கும். இது ட்ரம்ப் ஈவுத்தொகை என அழைக்கப்படும். வரும் இடைத்தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்குச் சீட்டில் எனது பெயர் இருப்பதாகவே கருதிக்கொண்டு குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், அதை ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார். ‘நாங்கள் இதைத் தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரப்பினோம். ட்ரம்ப் தற்போது திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ என தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கிண்டலாக கூறியுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும், பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ள ஸ்ரீதர் வேம்பு கடந்த காலம் தொடங்கியே இப்படி கடுமையாக திமுகவை கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கவர்ச்சியான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

