தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.

தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்வர்? யார் எதிர்க்கட்சித் தலைவர், தனி மெஜாரிட்டி கிடைக்குமா அல்லது தொங்கு சட்டசபை அமையுமா என ஏகப்பட்ட கேள்விகள் மக்களிடம். இரண்டு வாரத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

இந்தப் பின்னணியில் தமிழக பொதுத் தேர்தல் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் மொத்தத்தில் இரண்டே இரண்டு முறைதான் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவானது. முதலாவது நாட்டின் முதல் பொதுத் தேர்தலான 1952 தேர்தல். அடுத்த‌து திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பிறகு 2006 ல்.

மற்ற அனைத்துத் தேர்தல்களிலுமே மக்கள் தெளிவாக ஒரே கட்சிக்கு பெரும்பான்மையைத் தந்தார்கள்.

தமிழக மக்கள் தெள்ளத் தெளிவாக வாக்களித்த அந்தக் கடந்த காலத் தேர்தல்களை சின்னதாக ரீவைண்டு செய்து பார்க்கலாமா?

ஜெயலலிதா

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்.. (1991 – 1996)

ஜெ. ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரான 1991 தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. கூட்டணி அமோக வெற்றி பெற அதிமுகவுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைத்தது

திமுகவுக்கோ அதன் வரலாற்றில் எதிர்க்கட்சியாககூட சட்டசபையில் நுழைய முடியாத முதல் தேர்தல் இது. இரண்டு உறுப்பினர்களே தேர்வாகினர். காரணமாக‌ ராஜிவ்காந்தி படுகொலைச் சம்பவத்தைச் சொன்னார்கள். தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜிவ் கொல்லப்பட, அனுதாப வாக்குகளை அள்ளித் தந்து விட்டனர் மக்கள்.

முதல்வராக ஜெயலலிதாவும் எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியனும் பொறுப்பேற்றார்கள்.

g k mooppanar

உடைந்த காங்கிரஸ், சைக்கிள், ரஜினிகாந்த்… (1996 – 2001)

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிடிக்காமல் ‘அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்’ என தமிழக காங்கிரஸில் பெரும்பாலானோர் சொல்ல, அதற்கு செவி சாய்க்கவில்லை டில்லி தலைமை.

விளைவு, ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகி, அது திமுகவுடன் கூட்டணி அமைத்தது. போலீசாரின் கெடுபிடியால் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து நிம்மதியாக வெளியில் போய் வரமுடியவில்லை எனக் கடுப்பிலிருந்த நடிகர் ரஜினிகாந்த், திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவளித்தார்.

முந்தைய தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட கதி இந்த தேர்தலில் அதிமுகவுக்கு நிகழ்ந்தது. அதிமுக அதன் வரலாற்றில் எதிர்க்கட்சியாகக் கூட நுழையமுடியாத முதல் தேர்தல் இது. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்திருந்தவர்களின் செயல்பாடுகள், வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம். உள்ளிட்ட சில சம்பவங்களால் அதிருப்தியடைந்த மக்கள் சம்பவம் செய்து விட்டனர்.

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற எதிர்கட்சித் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸின் பாலகிருஷ்ணன் பதவியேற்றார்.

Vijayakanth Speech – DMDK MEETING

மைனாரிட்டி திமுக அரசு! (2006 – 2011)

வழக்கம் போல் திமுக தலைமையிலான அணிக்கும் அதிமுக தலைமையிலான அணிக்கும்தான் போட்டி என்றாலும் முதன் முதலாக தொங்கு சட்டசபை அமையக் காரணமாக அமைந்தது புதிய கட்சியான விஜயகாந்தின் தேமுதிக. தனித்துக் களம் கண்ட இந்தக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற, திமுக கூட்டணிக்கு அது சாதமாக அமைந்தாலும் திமுகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அதேநேரம் அவர்களை அமைச்சரவையில் சேர்க்காமலேயே தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார் மு. கருணாநிதி. அதேபோல் அந்த ஐந்து ஆண்டுகளும் ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்த மறக்கவே இல்லை ஜெயலலிதா.

admk dmdk allaince

இரண்டாவது முறையாக மூன்றாம் இடம்! (2011 – 2016)

முந்தைய தேர்தலில் தேமுதிகவினாலேயே ஆட்சி கைவிட்டுப் போனது என்பதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா இந்த முறை அந்தக் கட்சியை கூட்டணிக்கு இழுத்தார்.

கடந்த முறை திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவிடாமல் செய்த விஜயகாந்த் இந்த முறை அந்தக் கட்சியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படக் காரணமானார். ஜெ. முதல்வராக விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக வரலாற்றில் எதிர்க்கட்சியாகக்கூட இல்லாத இரண்டாவது சட்டமன்ற நாட்கள் இவை.

Banana Story reveals | DMDK & Makkal Nala Kootani

ஜெயலலிதா தொடரட்டும்.. (2016 – 2021)

திமுக காங்கிரஸ் முதலான பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட, அதிமுகவோ சில சிறிய கட்சிகளுடனேயே தேர்தலைச் சந்தித்தது.

இருந்தாலும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

ஓரளவு வாக்கு வங்கி உள்ள தேமுதிக, விசிக, மதிமுக கட்சிகள் சேர்ந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணியே ஜெ வெற்றிக்கு உதவியதாகப் பேசப்பட்டது.

ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்..! (2021 – 2026)

அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பதவி ஏற்ற தேர்தல். கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுக ஆட்சியமைத்த முதல் தேர்தலும் கூட.

ஜெயலலிதாவும் மறைந்து விட்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலைச் சந்தித்தது அதிமுக. திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைத்தது.

vijay

2021 – 2026 ?

மேலே கண்ட இந்த வரலாற்றைப் பார்த்தால் தமிழக மக்கள் பெரும்பான்மை பெற்ற அரசையே அதிகம் விரும்பியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அதே வழியில் இந்தத் தேர்தலிலும் தமிழக மக்கள் க்ளியர் கட் ரிசல்ட் தருவார்களா அல்லது 2006ல் விஜயகாந்த் நிகழ்த்திய‌ அந்த ‘மைனாரிட்டி’ சம்பவத்தை இருபது வருடங்களுக்குப் பிறகு விஜய் நிகழ்த்துவாரா என்பது இரண்டு வாரங்களில் தெரிந்து விடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *