12 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 5 தனித்தனி தூக்குத் தண்டனைகளும் மற்ற 4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சாகும் வரை சிறையில் இருக்க வேண்டிய 4 தனித்தனி ஆயுள் தண்டனைகளும், ஒரு சிறுமியை வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டு சிறையும், சிறுமிகளை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கும் தமிழக அரசு தலா 7 லட்சம் ரூபாய் (மொத்தம் 35 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு எழுதி முடித்ததும், வழக்கமான நடைமுறைப்படி தனது பேனா முனையை உடைத்து வீசினார் நீதிபதி. சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வழக்கில் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர காவல் துறையின் துணையுடன் பெரும் சட்டப்போர் நடத்திய அரசு வழக்கறிஞர் வி.ஆர்.தனலட்சுமி நம்மிடம்,
“இந்தத் தீர்ப்பு என்பது பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பிஞ்சு குழந்தைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய நீதி. சாக்லேட் கொடுத்தும், மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடக் கொடுத்தும் அந்தப் பிஞ்சுகளை ஆசை காட்டி ஏமாற்றித் தனது வக்கிரத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் இந்தக் குற்றவாளி.
அந்தக் குழந்தைகளுக்குத் தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய “குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பிறகுதான், ஒரு சிறுமி தைரியமாகத் தனது பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். அங்கிருந்துதான் இந்த நீதிக்கான போராட்டம் தொடங்கியது.