"50% முதியோர் சொந்த பிள்ளைகளால் துன்புறுத்தப்படுகின்றனர்" – மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆதங்கம்!

Spread the love

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. முதியவர்கள் எதிர்கொள்ளும் உடல், மன மற்றும் பொருளாதார ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம், பழையபாளையம் சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் முதியோர் கொடுமை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை, சக்தி மசாலா, வேளாளர் கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி கலந்துகொண்டார். பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவர்கள், 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் உரையாற்றிய மூத்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன், “ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ஆம் தேதி உலக முதியோர் கொடுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எங்கள் அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடியாகச் சென்று விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. அந்த விழிப்பு உணர்வு மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிகிறதா என்ற சந்தேகம் இருந்தது. அதனால்தான் இந்த ஆண்டு பொது நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்தோம். இதன் மூலம் மாணவர்கள் முதியோர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி

பல முதியோருக்கு வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகரப்புறத்தில் சில குடும்பங்களில் முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். ஆனால் கிராமங்களில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள். முதியோர், இளையவர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவும், புதிய பண்பாடுகளுமே தலைமுறை இடைவெளிக்குக் காரணமாகிறது. இதுவே காலம் செல்லச் செல்ல முதியோரை மதிக்காத ஒரு நிலை ஏற்படக் காரணமாகிறது.

முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயலாகும். தற்போதைய சூழலில் இளைஞர்கள் முதியோருடன் நேரம் செலவிடுவது குறைந்து வருகிறது. வார்த்தைகளால் அவர்களைக் காயப்படுத்துவதும், பொருளாதார ரீதியாக சிரமப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, மூன்றில் ஒரு முதியவர் புறக்கணிப்புக்கு ஆளாகிறார். மேலும் 50 சதவிகித முதியோர் தங்களது பிள்ளைகளால் துன்புறுத்தப்படுகின்றனர்.

முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி

இளைஞர்களின் எண்ணப்போக்கு மாற வேண்டும். தாங்களும் ஒருநாள் முதியோராவோம் என்பதை எண்ணிப் பார்த்து செயல்படுதல் அவசியம். பொருளாதாரத்தில் பின்தங்கிய முதியோருக்கு சமூகநலத் துறை மூலமாகவும், தன்னார்வத் தொண்டர்கள் மூலமாகவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மது மற்றும் போதைப் பழக்கங்கள், பொருளாதாரப் பிரச்னைகள் ஆகியவை முதியோர் மீதான கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. முதியோர்களை மதித்து நடத்துவதன் அவசியம் பற்றி பாடத்திட்டங்களிலும் இடம்பெற வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதியோர்களை மதித்து நடத்தவும், அவர்களின் நலனில் அக்கறை செலுத்தவும் உறுதிமொழி ஏற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *