Sports
oi-Yogeshwaran Moorthi
வாஷிங்டன்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், 1998-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகத் தகுதி பெற்று நார்வே அணி அசத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று மிரட்டி இருக்கிறது. மைதானத்தில் அந்த அணி காட்டும் அதிரடி ஒருபக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் நார்வே அணி சாப்பிடும் உணவு குறித்துப் பரவி வரும் ஒரு செய்தி உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக, நார்வே அணி அமெரிக்காவில் உள்ள உள்ளூர் உணவுகளை நம்பாமல், தங்கள் நாட்டிலிருந்தே 1,000 கிலோ உணவையும், ஆரஞ்சு பழங்களையும் விமானம் மூலம் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் கிளம்பின.

இதனால் இந்த அணி நார்வே Football டீமா அல்லது நார்வே Food ball டீமா என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். இதற்கு நார்கே அணியின் தலைமை செஃப் விளக்கம் கொடுத்துள்ளார். அவர், நார்வே அணி குறித்து பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறு. தாங்கள் கொண்டு வந்தது 1,000 கிலோ அல்ல. 580 கிலோ உணவுப் பொருட்கள் மட்டும்தான்.
நார்வே நாட்டின் புகழ்பெற்ற சாலமீன் மற்றும் ட்ரவுட் மீன் 300 கிலோ கொண்டு வந்துள்ளோம். ஹாலிபட் மீன் 100 கிலோ, நார்வேயின் பாரம்பரிய பிரவுன் சீஸ் 80 கிலோ, ஜார்ல்ஸ்பெர்க் சீஸ் 100 கிலோ கொண்டு வந்திருக்கிறோம். ஆரஞ்சு பழங்கள் அமெரிக்காவில் இருந்தே வாங்கி தினமும் ஜூஸ் போட்டு குடிக்கிறோம்.
உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் விளையாடும்போது, வீரர்களுக்குப் பழக்கப்பட்ட சுவையும், சீரான உணவும் முக்கியம். குறிப்பிட்ட சில உணவுகளையும் சுவைகளையும் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு பரிச்சயமான உணவுகளை வழங்குவது அவர்களின் ஊட்டச்சத்துக்கும், மனநலனுக்கும் பெரிதும் உதவும். இதற்காகவே சில குறிப்பிட்ட நார்வே தயாரிப்புகளைக் கொண்டு வந்தோம்.
அதேபோல் அமெரிக்காவில் சமைப்பது மிகச் சிறந்த அனுபவமாக உள்ளது. இங்கு உயர்தரமான உள்ளூர் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. அமெரிக்காவின் உள்ளூர் பொருட்களையும், எங்கள் நாட்டின் பாரம்பரியப் பொருட்களையும் இணைத்து வீரர்களுக்கு வீட்டு உணர்வைத் தரும் உணவுகளை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வது வழக்கமான ஒன்றுதான். ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியா செல்லும் போது இந்திய காபி பாக்கெட்டுகளை எடுத்து செல்வார்கள். அதேபோல் ஆஸ்திரேலியா அணியிலும் இந்திய சுற்றுப்பயணத்தின் போது காபி மெஷினை சில வீரர்கள் கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.