ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.
குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூர் மலைப்பாதை வழியாகச் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்திருக்கிறார்கள்.
நந்தகோபாலா பாலம் அருகில் சென்றுக் கொண்டிருந்த இவர்களின் சுற்றுலா வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இதில் தூக்கி எறியப்பட்ட பயணிகள் அலறித் துடித்துள்ளனர். விபத்தைக் கண்டுப் பதறிய சக வாகன ஓட்டுநர்கள், இவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர், “பெண்கள், சிறுவர்கள் என வேனில் பயணம் செய்த 22 சுற்றுலாப் பயணிகளில் 18 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் 14 பேருக்குப் படுகாயம். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மலைப்பாதைகளில் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்” என்றனர்.