Aval Vikatan – 19 May 2026 – டாஸ்மாக் முதல் சந்துக்கடைகள் வரை சீரழியும் மாநிலம்… மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்! | namakkulle editorial page

Spread the love

பொறுக்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தில் தள்ளிய சமூகக் குற்றம்தான், பெண்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குப் பின்னணியாக இருக்கும். அப்படித்தான், தருமபுரி மாவட்டம், போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கியுள்ள பெண்கள், அக்கடைகளை மூடக்கோரி முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

போடூரில் `சந்துக்கடைகள்’ எனப்படும் சட்டவிரோத மதுக்கடைகள் பல நடந்துவருகின்றன. இவற்றை அகற்ற பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இக்கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை நடக்க, குடிகாரர்கள் அவ்வழியாகச் செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒருபக்கம், தங்கள் வீட்டு ஆண்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் மதுவுக்குச் செல்லும் கொடுமை, இன்னொருபக்கம், தாங்கள் குடிகாரர்களால் சீண்டல்களுக்கு உள்ளாகும் கொடுமை என பாதிக்கப்பட்ட பெண்கள், அப்பகுதி இளைஞர்கள் சிலரை அழைத்துச் சென்று, சந்துக்கடையை அடித்து மூடச் செய்துள்ளனர்.

அக்கடையை நடத்தி வந்த கோவிந்தன் என்பவர் பெண்களுடன் வாக்குவாதம் செய்ய, அவரை பெண்கள் விரட்டிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குற்றவாளியைப் பிடிக்க வேண்டிய காவல்துறையும் அரசுத் துறைகளும் வேடிக்கை பார்க்க, கையறு நிலையில் இருக்கும் இந்தப் பெண்களே களத்தில் இறங்கிய காட்சி மிக அவலமானது.

தமிழ்நாடு முழுவதும் 4,787 டாஸ்மாக் கடைகள் சட்டபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன. 2024-25 நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் சுமார் ரூ.48,344 கோடி. இத்தனை கோடிகளும், உழைத்துக் கூலி பெற்றுச் செல்லும் ஆண்களின் சட்டைப்பையில் இருந்து அரசு உருவும் பணம்.

நல்ல சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத எத்தனையோ வீடுகளில் இருந்தும்கூட, தவறாமல் டாஸ்மாக்குக்குச் சென்றுவிடுகிறது காசு. பொருளாதாரப் பிரச்னை மட்டுமன்றி, குடும்ப வன்முறை முதல் குழந்தைகள் மனநிலை பாதிப்பு வரை குடி ஏற்படுத்தும் பயங்கரங்கள் பல. சட்டரீதியான விற்பனையிலேயே இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, சட்ட விரோதமான விற்பனை இதைவிட கொடூரமாக உள்ளது.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், மாநில அரசின் வருவாயில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனாலும், அதை முறைப்படுத்துவதைக்கூட அரசு செய்வதில்லை. டாஸ்மாக் ஊழல்கள் ஒருபக்கம் என்றால், போலி மது, கள்ளச்சாராயம், சந்துக்கடைகள் எனச் சீரழிகிறது மாநிலம். இவையெல்லாம் பொருளாதாரம் முதல் உயிரிழப்பு வரை குடி மகன்களை எல்லா வகையிலும் வதைப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன அரசுத் துறைகள். காரணம், அவர்களுக்கு உரியவர்களிடமிருந்து பணம் முதல் எல்லாம் வருகிறது.

பென்னாகரத்தில் பெண்கள் அடித்து நொறுக்கியிருப்பது, அரசின் இந்தப் போக்கைத்தான். அமையவிருக்கும் புதிய ஆட்சியிலாவது இந்த ஊழல்களும் அலட்சியங்களும் மாறட்டும்.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *