Bisleri: "2025-ம் ஆண்டு மாதிரி அது; இன்னொரு சோதனையில் சரியாக தான்.!" – நிறுவனம் சொல்லும் விளக்கம்

Spread the love

பிஸ்லரி தண்ணீர் பாட்டிலில் ‘புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்’ இருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், பிஸ்லரி தண்ணீர் பாட்டில் குடிப்பதற்கு பாதுகாப்பற்றது என்றும் கூறியுள்ளது.

இதற்கு விளக்கமளித்து பிஸ்லரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பிஸ்லரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளை நாங்கள் அறிவோம்.

இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2025 செப்டம்பர் மாதம், எங்களது 143 உற்பத்தி ஆலைகளில் ஒன்றான கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பேட்ச் குடிநீர் தொடர்பானது.

பிஸ்லரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை
பிஸ்லரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

2025 செப்டம்பர் 30-ஆம் தேதி, கோவா ஆலையிலிருந்து அதிகாரிகள் ஆறு மாதிரிகளைச் சேகரித்தனர். ஆரம்பகட்டப் பரிசோதனையில், ஐந்து மாதிரிகள் அனைத்துத் தர நிர்ணய விதிகளுக்கும் உட்பட்டு இருப்பது உறுதியானது.

ஆனால், ஆறாவது மாதிரியில் புரோமேட் அளவு, நிர்ணயிக்கப்பட்ட வரம்பான ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராமுக்குப் பதிலாக 12 மைக்ரோகிராமாகப் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, 2025 நவம்பர் 22 அன்று பிஸ்லரி நிறுவனம் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, அந்த மாதிரியை மறுபரிசோதனைக்காகப் பரிந்துரை ஆய்வகத்திற்கு அனுப்பியது.

அந்தப் பரிந்துரை ஆய்வகத்தின் சோதனையில், மாதிரியில் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருப்பது கண்டறியப்பட்டது;

ஆனால், அதில் ‘பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்’ (PAHs) இருப்பதாகத் தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு பரிசோதனை முடிவுகளுக்கும் இடையே இருந்த இந்த வேறுபாடு பல கேள்விகளை எழுப்பியதால், இது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக பிஸ்லரி கருதியது.

இதைத்தொடர்ந்து, அதே மாதிரியை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அங்கீகாரம் பெற்ற மற்றொரு சுயாதீன ஆய்வகத்தில் பிஸ்லரி பரிசோதனைக்கு உட்படுத்தியது. அந்தப் பரிசோதனையிலும் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிஸ்லரி
பிஸ்லரி

இந்தச் சுயாதீன ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை, 2026 பிப்ரவரி 2-ம் தேதியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்துடன் FSSAI-ன் மேற்கு மண்டல அலுவலகத்தில் நாங்கள் சமர்ப்பித்தோம். அந்தச் சமர்ப்பிப்பிற்குப் பிறகு FSSAI தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவொரு தகவலும் வராததால், இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவே நாங்கள் கருதினோம்.

இன்றுவரை, பிஸ்லரி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ எந்த நோட்டீஸும் வரவில்லை; மேலும், ஊடகங்களில் கூறப்படும் அந்த நோட்டீஸை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இணையதளத்திலும் எங்களால் கண்டறிய முடியவில்லை.

குடிநீரின் பாதுகாப்பே பிஸ்லரி நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.

எங்களது 10-நிலை உற்பத்திச் செயல்முறையில் 90-க்கும் மேற்பட்ட கடுமையான தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். உரிய ஒழுங்குமுறை நடைமுறைகள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண FSSAI-க்கு நாங்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிப்போம். பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டான பிஸ்லரி, எப்போதும் பருகுவதற்குப் பாதுகாப்பானது” என்று கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *