கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், கோவை சங்கனூர் எரு கம்பெனி சந்திப்பு பகுதியில் இயங்கி வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக பெட்ரோல் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கில் பெட்ரோல் நிரப்பி வாகனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்துள்ளன.
இதனிடையே நேற்று முன்தினம் பிற்பகல் வாகனங்களுக்கு சி.என்.ஜி எரிவாயு நிரப்புவதற்காக ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பெட்ரோல் பங்க் வளாகத்தில் வரிசையில் நின்று கொண்டு இருந்துள்ளன. அச்சமயத்தில் உரிய பாதுகாப்பு இன்றி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் புதிதாக அமைக்கப்பட்டு இருந்த பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் பம்ப் மூடியை பொருத்தி உள்ளனர்.
அப்போது பெட்ரோல் பம்ப் குழாயில் இருந்த பெட்ரோல், புதிதாக அமைக்கப்பட்டு இருந்த காலி டேங்கருக்குள் செல்லவே, அதீத அழுத்தம் காரணமாக பெட்ரோல் டேங்கின் மூடி சிதறி அங்கு வரிசையில் கேஸ் நிரப்புவதற்காக தனது ஆட்டோவில் காத்திருந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த கன்னிமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநரின் தலையில் பலமாக மோதியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த கன்னிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓடியதுடன், சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் கன்னிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் சந்தோஷ், மேலாளர் தனபால் மற்றும் ஊழியர்கள் அஜித் குமார், ராஜசேகர்,அகஸ்டின், அஜித் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த கவுண்டம்பாளையம் காவல் துறையினர், 5 பேரை கைது செய்ததுடன் தலைமறைவாக உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் சந்தோஷை தேடி வருகின்றனர்.