'Climate Change பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இது மட்டும்தான் வழி!' – City Union Bank கருத்தரங்கு

Spread the love

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல், ‘பசுமை முறை’யில் தொழிலை வளர்ப்பது குறித்து… சிட்டி யூனியன் வங்கி கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி விஜய் ஆனந்த் கருத்தரங்கை தொடக்கி வைத்தார். இதில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்குச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் பல்வேறு பிரிவுகளில் பயிற்சியளித்தனர்.

“ஜவுளித் துறையில் மட்டுமே 2030-ம் ஆண்டுக்குள் 2.7 பில்லியன் கார்பன் உமிழ்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் கார்பன் உமிழ்வை முழுவதும் நிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி, 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை நிறுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தும்போது புவி வெப்பமயமாதல் தடுக்கப்பட்டு தொழில் வளர்ச்சி மேம்படும்” என்று நிபுணர்கள் விளக்கினர்.

பயிலரங்கில் பேசிய ‘டேரி’ என்ற ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் சித்தார்த் சின்ஹா, “பருவநிலை மாற்றங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதிகப்படியான வெயில் மற்றும் மழை ஆகியவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாகப் பருவநிலை மாற்றத்தால் வெள்ளப்பெருக்கு, புயல், அதீத மழைப்பொழிவு, வெப்ப அலைகள், குளிர் அலைகள், காட்டுத்தீ போன்ற தீவிர நிகழ்வுகளும்; வெப்ப நிலை உயர்வு, வறட்சி, கடல் மட்டம் உயர்வு, மழைப்பொழிவு முறை மாறுதல், மண் மற்றும் வேளாண்மை பாதிப்பு போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

கடந்த 60 ஆண்டுகளில் கோவையின் வெப்பநிலை 1.07 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், திருப்பூரின் வெப்பநிலை 0.96 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த வெப்ப நிலை இன்னும் அதிகரிக்கும். திருப்பூரின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 1.48 மில்லி மீட்டர் குறைந்து வருகிறது. இப்பகுதிகளில் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படலாம். பருவநிலை மாற்றம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றிலும் பாதிப்புகள் ஏற்படும். இதனால், விநியோகச் சங்கிலிகள், செயல்பாடுகள், காப்பீட்டுச் செலவுகள், முதலீடு என அனைத்திலும் பாதிப்புகள் ஏற்படும். கடன் ஆபத்து, சொத்து மதிப்பிழப்பு, பணப்புழக்கமின்மை போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

இவற்றைத் தடுக்க கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். கார்பனை உறிஞ்சும் காடுகள், மண், கடல்களை மேம்படுத்த… புதைபடிவ எரிபொருள்களுக்குப் பதிலாக இயற்கையான ஆற்றலுக்கு மாற வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவில் காலநிலைக்கு ஒதுக்கும் நிதி இரட்டிப்பாகியுள்ளது. இது எதிர்வரும் 2050-ம் ஆண்டில் 9 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியாவிட்டாலும், கட்டுப்படுத்த முடியும். அதற்கான திட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி விஜய் ஆனந்த், “பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காலத்தின் கட்டாயம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும்போது உற்பத்தி செலவு குறைவதோடு, 25 சதவிகிதம் வரை உற்பத்தி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது, மக்கள் சோலார் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எங்கள் வங்கி புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க எப்போதும் தயாராக உள்ளது” என்றார்.

எதிர்கால நல்வாழ்வுக்காக… தொழில் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு மாற வேண்டிய காலம் இது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *