'CM சும்மா 50மீ ஓடுவாருன்னு நினைச்சோம்.!' – முதல்வருடன் மாரத்தானில் ஓடிய வீராங்கனைகள் நெகிழ்ச்சி!

Spread the love

‘ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்து கலந்து கொண்ட சில விளையாட்டு வீராங்கனைகள் அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

CM Vijay
CM Vijay

இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா. இவருக்கு 42 வயது. தயான்சந்த் விருதை வென்றிருக்கிறார். இவரும் முதல்வருடன் மாரத்தானில் கலந்துகொண்டு முழு தூரத்தையும் நிறைவு செய்திருக்கிறார்.

‘முதல்வர் இந்த மாரத்தானில் கலந்து கொள்வார் என எங்களிடம் சொல்லவே இல்லை. அது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சிதான். தமிழகத்தின் முக்கியமான வீரர் வீராங்கனைகளை மாரத்தானை தொடங்கி வைத்து ஓட அழைத்திருந்தனர். முதல்வருடன் சேர்ந்து அதை தொடங்கி வைப்போம் என நினைக்கவே இல்லை. எனக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. பையன் 8 ஆம் வகுப்பு படிக்கிறான். இப்படி நீண்ட தூரம் ஓடியே பல வருடங்கள் ஆகிவிட்டது.

முதல்வர் விஜய்க்கு அருகே கவிதா
முதல்வர் விஜய்க்கு அருகே கவிதா

மாரத்தானை தொடங்கி வைத்து முதல்வர் ஒரு 50 மீட்டர் ஓடிவிட்டு நின்றுவிடுவார் என நினைத்தோம். ஆனால், அவர் ஓடிக்கொண்டே இருந்தார். அவருடன் நானும் எப்படி ஓடினேன் என என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரின் ‘சிங்கப்பெண்’ பாட்டு எங்களின் கபடி வீராங்கனைகளுக்கு பெரும் ஊக்கம் கொடுக்கக்கூடியது. இதை பல மேடைகளில் கூறியிருக்கிறேன். படங்களின் வழி பெண்களுக்கு உந்துதல் கொடுத்தவர் இப்போது என் அருகேயே இருப்பதால் ஒரு உத்வேகத்திலும் உற்சாகத்திலும் நானும் ஓடிவிட்டேன்.

ஓடிக்கொண்டே எங்களுடன் பேசவும் செய்தான். ‘என்னம்மா Achieve பண்ணிருக்கீங்க…என்ன பண்றீங்க’னு கேட்டார். ‘இந்தியன் டீம் கபடி கோச் சார். ப்ளேயராவும் கோச்சாவும் ஆசிய அளவுல இந்தியாவுக்கு மெடல் வின் பண்ணிருக்கேன்’னு சொன்னேன். கேட்டுட்டு சந்தோஷம்மான்னு சொன்னாரு. முதலமைச்சர் உடன் இப்படி ஒரு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்குமென்று நினைக்கவே இல்லை. உறவினர்கள், நண்பர்கள் என எல்லாரும் டிவியில் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் போனில் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். போனும் கையுமாகத்தான் பல மணி நேரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார் மகிழ்ச்சியாக.

முதல்வருக்கு அருகே பவானி
முதல்வருக்கு அருகே பவானி

பவானி தேவி வாள் வீச்சு வீராங்கனை. இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தமிழக வீராங்கனை. அவர் பேசுகையில், ‘முதலமைச்சரை சுற்றி நிறைய பாதுகாவலர்கள் இருந்தனர். கூட்டமும் அதிகமாக இருந்தது. அதனால் நான் கொஞ்சம் பின் தங்கிவிட்டேன். அதை முதல்வரும் ஆதவ் சாரும் கவனித்து பாதுகாவலரிடம் சொல்லி என்னை முன்னே அழைத்து வந்தனர். எங்களை உத்வேகப்படுத்திக் கொண்டே அவரும் ஓடினார். என்னைப் பற்றி விசாரித்தார்.

இரண்டு இடங்களில் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு ஓய்வெடுத்தார். அப்போது, ‘ஓடி ரொம்ப நாளாச்சுல்ல அதாம்மா…’ எனக் கூறினார். ‘சார்…நானும் ஓடி ரொம்ப நாளாச்சு….ஒரு காயத்துக்கு அப்புறம் இப்போதான் ரொம்ப நாள் கழிச்சு ஓடுறேன்’னு சொன்னேன். அவர் பக்கத்தில் உட்கார கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. ஆனால், அவர் எங்களுடன் சகஜமாக பழகினார். சார்…செல்பி எடுக்க வேண்டும் என்றேன் உடனே ஓகே சொன்னார். ‘V சிம்பல் காட்டுங்க’னு சொன்னேன். அதையும் செஞ்சார். லைட் ஹவுஸ் வர எங்க கூட ஓடி வந்தார். அங்கே அவருடைய கான்வாய் தயாராக இருந்தது. ‘தேங்க்யூம்மா நான் வரேன்’னு எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பிட்டார். விளையாட்டு தொடர்கள் சம்பந்தமாக 6-7 மாதங்கள் வெளிநாடுகளில் பயணித்துவிட்டு நேற்றுதான் சென்னை வந்தேன். சென்னையில் கால் வைத்த உடனேயே இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்குமென நினைக்கவே இல்லை’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *