CM தொகுதியை கண்டுகொள்ளாத அமைச்சர் விக்னேஷ்? தேவாலயம் அருகிலேயே இயங்கும் TASMAC ! – Kumudam

Spread the love

சென்னை முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில், பேருந்து நிலையம், தேவாலயம் மற்றும் தனியார் கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் தனியார் கல்லூரிக்குச் செல்லும் வழியிலேயே இந்த மதுக்கடை அமைந்திருப்பதால், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 80 மீட்டர் தொலைவிலும், தேவாலயத்திலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவிலும் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள், தேவாலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் எனப் பலரும் தினந்தோறும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்தில் இறங்கி, இந்த மதுக்கடை அமைந்துள்ள சாலையைக் கடந்துதான் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல், மாலை நேரங்களில் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளும் இதே பாதையைப் பயன்படுத்துகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வரும் சிலர் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துவதுடன், போதையில் தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தேவாலயத்தின் புனிதத்தன்மைக்கும் பாதிப்பு!

டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வரும் சிலர், தேவாலயத்தின் முன்பாகவே சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, போதையில் மயங்கிக் கிடப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, தேவாலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள புனித அந்தோணியார் திருவுருவச் சிலையின் அருகிலேயே அமர்ந்து மது அருந்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஒரு கடை இருக்கும்போது, இன்னொரு கடை எதற்கு?

இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், இதே சாலையில் கொருக்குப்பேட்டை செல்லும் வழியில் ஏற்கனவே போதிய போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளுடன் பெரிய அளவிலான டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அப்படியிருக்க, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் மேலும் ஒரு மதுக்கடை எதற்காகச் செயல்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் தொகுதி தூய்மையாகவும், சுகாதாரமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி நடமாடும் வகையிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

717 டாஸ்மாக் கடைகளை அகற்றியதாகக் கூறப்படும் அரசு… முதலமைச்சர் தொகுதியில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சுமார் 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளையும் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால், முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் கல்லூரி அருகிலும், தேவாலயம் மற்றும் பேருந்து நிலையம் அருகிலும் மதுக்கடை செயல்படுவது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? இந்தக் கடை அமைந்துள்ள இடத்திற்கு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளனவா? பொதுமக்களின் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளனவா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

முதலமைச்சர் தொகுதியை மறந்துவிட்டாரா?

ஊருக்குத்தான் உபதேசமா? முதலமைச்சர் தொகுதியிலேயே இப்படி ஒரு நிலை நீடிப்பதை முதலமைச்சர் விஜய் கவனிக்கவில்லையா? அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்படவில்லையா? டாஸ்மாக் துறையைச் சார்ந்த அமைச்சரின் கண்களுக்கு முதலமைச்சர் தொகுதியில் செயல்படும் இந்தக் கடை புலப்படவில்லையா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டாரா? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையை ஆய்வு செய்து, விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

முதலமைச்சரின் தொகுதியிலேயே எழுந்துள்ள இந்தப் புகாருக்கு முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப்போகிறார்? சம்பந்தப்பட்ட டாஸ்மாக் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பொதுமக்களின் கோரிக்கை வழக்கம்போல் கிடப்பில் போடப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *