ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்பு வரை பேரூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சிற்றூரே கோயம்புத்தூர். கோவன் என்ற பழங்குடித் தலைவன் ஆண்ட இந்த ஊர், கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோயம்புத்தூராக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலப்பரப்பு ஒரு குறிப்பிட்ட அரசர்களின் ஆளுகைக்குள் நிரந்தரமாக இருந்ததில்லை. பல்வேறு அரசுகளின் ஆளுகைக்குக் கீழ் மாறி மாறி இருந்து வந்துள்ளது. சேரர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான் எனப் பலரின் ஆளுகைக்குக் கீழ் இருந்துள்ளது. அப்போது ஒரு கோயில், சிறிய கோட்டை, நான்கைந்து வீதிகள் மட்டுமே கொண்ட ஊராக இருந்த கோவைக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை.