தூக்குத்தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை வழங்கி வருகிறார்.
அங்குள்ள முசாபர்நகர் கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக ரவிக்குமார் திவாகர் பொறுப்பேற்றது முதல் 10 வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முசாபர்நகரில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மரண தண்டனையை விதித்தார். வழக்கறிஞர் சமீர் சைஃபி கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஏப்ரல் 28 அன்று, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு குற்றவாளிக்கு மே 30ம் தேதியும், அதைத் தொடர்ந்து இரண்டு பேருக்கு ஜூன் 20ம் தேதியும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு குற்றவாளிக்கு ஜூலை 2ம் தேதியும், இரண்டு பேருக்கு ஜூலை 6ம் தேதியும், மேலும் நான்கு குற்றவாளிகளுக்கு ஜூலை 17ம் தேதியும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நடப்பு மாதத்தில் கடந்த 12ம் தேதி ஒரு குற்றவாளிக்கும், கடந்த 13ம் தேதி நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பரேலி கோர்ட்டில் நீதிபதியாக இருந்தபோது 13 பேருக்கு மரண தண்டனைகள் விதித்த நீதிபதி திவாகர், இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.
இதனால் நீதிபதி திவாகர் முன்பு விசாரணைக்கு வந்தால் கைதிகள் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இதே நீதிபதிதான் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் வீடியோ கிராஃபிக் ஆய்வுக்கு 2022-ல் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது கியான்வாபி மசூதி வழக்கில் நாடு முழுவதும் பேசப்படட் நீதிபதி, இப்போது மரண தண்டனை உத்தரவுகள் மூலம் மீண்டும் செய்திகளில் கவனம் பெற்றிருக்கிறார்.