டெல்லி நிலவரம்
தலைநகர் டெல்லியில் இதுவரை ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 2,308 H1N1 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் 114 புதிய H1N1 வழக்குகளும், 159 காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அறிகுறிகள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்கள்
* முக்கிய அறிகுறிகள்: திடீர் காய்ச்சல், குளிர், வறட்டு இருமல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி மற்றும் அதிக சோர்வு.
* பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் ஆஸ்துமா, சி.ஓ.பி.டி (COPD), நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள். இவர்களுக்குத் தொற்று தீவிரமடையும் ஆபத்து அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள்
H1N1 என்பது வைரஸ் தொற்று என்பதால், மருத்துவர்களின் பரிந்துரையின்றி “Azithromycin’ போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தாமாக உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ ஆலோசனையுடன் தேவைக்கேற்ப ஆன்டி-வைரல் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தீவிர சோர்வு அல்லது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் இருமும்போது கைக்குட்டையைப் பயன்படுத்துவது போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.