இந்தியத் துறைமுகங்களில் வேகமான வளர்ச்சியைப் பெற்று வரும் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், தூத்துக்குடி மற்றும் இலங்கை கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே புதிய நேரடிக் கொள்கலன் கப்பல் இணைப்புச் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
ஜே.எம். பக்ஷி குழுமத்தால் இயக்கப்படும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தூத்துக்குடி சர்வதேசச் சரக்குப்பெட்டக முனையத்தில் நடைபெற்ற விழாவில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் இந்தப் புதிய கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். ’பனாமா’ நாட்டின் கொடியுடன் இயங்கும் “எம்.வி. செரின் இங்க்ரிட்’ என்ற இந்தக் கொள்கலன் கப்பல், 669 டி.இ.யு. கொள்ளளவைக் கொண்டது. மேலும், இதில் 60 குளிர்சாதனச் சரக்குப்பெட்டகங்களுக்கான மின் இணைப்பு வசதிகளும் அமையப் பெற்றுள்ளன.

தனது முதல் பயணமாக, இக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 169 டி.இ.யு. கொள்ளளவு கொண்ட சரக்குப்பெட்டகங்களை ஏற்றிச் சென்றது. புளூ அட்லாஸ் லைன்ஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சேவைக்கு, யுனைடெட் லைனர் ஷிப்பிங் சர்வீசஸ் எல்.எல்.பி மற்றும் ஜே.எம். பக்ஷி குழும நிறுவனம் கப்பல் முகவர் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. தூத்துக்குடி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே இயக்கப்படும் இக்கப்பல் சேவை, வாரம் இருமுறை தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.